Header Ads

அதிரும் செய்தி: ரஷ்ய தொடர்புகளையடுத்து ட்ரம்ப்பின் பாதுகாப்பு ஆலோசகர் இராஜினாமா



ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெனரல் மைக்கல் பிளின், நேற்று முன்தினமிரவு (13), தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்னரே, ரஷ்யா மீதான ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து கலந்தாலோசித்தாரா என்பது குறித்து, கூர்ந்தாய்வுக்கு உட்பட்ட நிலையிலேயே, தனது பதவியிலிருந்து பிளின் இராஜினாமா செய்துள்ளார்.  

பிளின் தொடர்பான நிலைமையை ஆராய்ந்து வருவதாகவும் உப ஜனாதிபதி மைக் பென்ஸுடன் உரையாடி வருவதாகவும் பேச்சாளரொருவரினால் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்த சில மணித்தியாலங்களிலேயே, தனது இராஜினாமாவை பிளின் சமர்ப்பித்திருந்தார்.   ரஷ்யர்களுடன் பொருளாதாரத் தடைகள் குறித்து கலந்துரையாடியிருக்கவில்லை என பென்ஸிடம், பிளின் உறுதியளித்திருந்தபோதும், குறித்த விடயம் கலந்துரையாடப்பட்டிருந்ததாகப் பின்னர் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், “எதிர்பாராதவிதமாக, வேகமாக நடைபெற்ற நிகழ்வுகள் காரணமாக, ரஷ்யத் தூதுவருடனான எனது தொலைபேசி அழைப்புகள் குறித்து, உப ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தவரிடமும் ஏனையோரிடமும் முழுமையற்ற தகவல்களை, உள்நோக்கமற்று கூறினேன். ஜனாதிபதியிடமும் உப ஜனாதிபதியிடமும் தாழ்மையாக மன்னிப்புக் கோரினேன். அவர்கள் எனது மன்னிப்பை ஏற்றுக் கொண்டார்கள்” என தனது இராஜினாமா கடிதத்தில் பிளின் கூறியுள்ளார்.   

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.