Header Ads

“இந்தியாவின் உதவியோடு, இலங்கையில் ‘ஒற்றை தேசம்’ முயற்சி..!” கண்டிக்கும் திருமுருகன்காந்தி..

இலங்கையின் புதிய அரசியல் சாசனத்தால் தமிழர்களுக்கு ஒரு நன்மையும் விளையப்போவதில்லை. மாறாக, இலங்கை சர்வதேச விசாரணையில் இருந்து பாதுகாக்கப்பட்டுவிட்டது. இலங்கையின் அப்போதைய அரசியல் சாசனம் முதல் தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் அரசியல் சாசனம்வரை எதுவுமே தமிழர்களுக்கு உதவாது. அங்கிருக்கும் தமிழர்கள் இன்றும் அகதியைப் போன்ற வாழ்க்கை முறையைத்தான் வாழ்ந்துவருகிறார்கள். இந்தியா உள்பட பல நாடுகளும் இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்கெனவே துரோகம் செய்தது மட்டுமல்லாமல் தற்போதும் மாபெரும் துரோகங்களைச் செய்துகொண்டிருக்கின்றன'' என்கிறார் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி. அவரிடம் உரையாடினோம்...

“தமிழர்களின் நலனை மேம்படுத்துவதற்காக இலங்கையில் புதிய அரசியல் சாசனம் முன்மொழியப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறதே?”

“ஐ.நா-வின் மனித உரிமை ஆணையத்தால் நிறைவேற்றப்பட்டு, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளால் முன்மொழியப்பட்ட தீர்மானங்கள் யாவும் இலங்கைத் தமிழர்களுக்கு எந்தப் பலனையும் தராது. இந்தப் புதிய அரசியல் சாசனத்தின் நோக்கமே இனப்படுகொலை, போர்க்குற்றம், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றுக்கு எதிராகச் சர்வதேச நாடுகளின் விசாரணையில் இருந்து தன்னைப் பாதுகாக்கும் நோக்கில் இலங்கை அரசு கையாளும் ஒரு யுக்தி. தமிழர்களின் நலனுக்காக இலங்கை அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டுவரப்படவேண்டும் என்று ஐ.நா அறிவித்திருந்தது. ஆனால், புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் அரசியல் திருமுருகன் காந்திசாசனத்தில் இலங்கை அரசு தமிழர்களுக்கான தனித்த உரிமைகள் என்று எதுவும் வழங்கப்படவில்லை. அதாவது, தற்போதிருக்கும் அரசியல் சாசனத்தின் மேல் அட்டையை மட்டும் மாற்றும் வேலைதான் இந்தப் புதிய அரசியல் சாசனம். ‘ஐக்கிய ராஜ்யாய’ என்ற பௌத்த மதம் மட்டுமே கொண்ட 'ஒற்றைத் தேசம்' அமைப்பதுதான் இலங்கையின் நோக்கம். அதற்கான அனைத்து முயற்சிகளிலும் இந்தியா உள்பட பல நாடுகளின் உதவியோடு தமிழர்களுக்கு எதிரான இந்தச் சதித்திட்டம் தீட்டப்பட்டு வருகிறது."

“அங்கிருக்கும் தமிழர்களின் தற்போதைய நிலை என்ன?”

“போருக்குப்பின் மறு குடியிருப்பு அமைக்கப்படவில்லை. கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் ராணுவம் பின்வாங்கப்படவில்லை. அப்பாவித் தமிழர்களைப் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்து வைத்துள்ளார்கள். தமிழர்களின் நிலங்களும் சிங்கள ராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுவருகிறது.

அதுமட்டுமல்லாமல், கிழக்கில் உள்ள தமிழர்களும், வடக்கில் உள்ள தமிழர்களும் ஒன்று சேர்ந்துவிடாமல் பிரித்தாளும் சூழ்ச்சி முறை தீவிரமாகப் பின்பற்றப்பட்டுவருகிறது. இலங்கையின் அரசியல் சட்டம் 6-வது பிரிவு பிரிவினையைப் பற்றிப் பேசுபவர்களை ஜெயிலில் அடைக்க வேண்டும் என்றிருக்கிறது. அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தித் தமிழர்களைச் சிறையில் அடைக்கும் கொடுமைகள் நடந்து வருகின்றன

போருக்குப்பின் இந்தக் கொடுமைகளைத்தான் தமிழர்கள் அனுபவித்து வருகிறார்கள். இதற்கு உதவி செய்வதுடன் மட்டுமல்லாமல் வெளியே தெரியக்கூடாது என்று இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, சுவிட்சர்லாந்து, நார்வே, ஜெர்மன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகச் செயல்படுவதுடன் மட்டுமல்லாமல், இலங்கையுடன் ராணுவ மற்றும் பொருளாதார ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. இல்லையென்றால், தமிழர்களுக்குச் சொந்தமான இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அமெரிக்கா, ஜப்பான், சீனா போன்ற நாடுகள் போர்ப் பயிற்சியில் ஈடுபடுமா?"

"இந்தியப் பெருங்கடலில் போர்ப் பயிற்சி என்பது, வருங்காலத்தில் இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஆகாதா?"

“அதைப் பற்றிய கவலை இந்தியாவில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் அறவே கிடையாது. இங்கு போர்ப் பயிற்சிக்கு வரும் நாடுகள் இந்தியாவின் அனுமதியில்லாமல் வருவதில்லை. இந்தியாவும் அந்த நாடுகளுடனான பொருளாதார ஒப்பந்தத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு நமது கடற்பரப்பில் அவர்களை அனுமதிக்கிறது. பொருளாதார ஒப்பந்தம் என்ற பெயரில் பிற நாடுகள் இந்தியப் பெருங்கடலின் ஆதிக்கத்தைக் கைப்பற்ற வருகின்றன. இதைப்பற்றி இந்திய அரசு சிறிதும் யோசிப்பது கிடையாது.


வருங்காலத்தில் இது இந்திய இறையாண்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களாக இருக்கப்போகிறது.”

“மாவீரர்கள் தினம் பற்றி?”


தமிழீழம் பெற வேண்டிய யுத்தத்தில் இன்னுயிரை ஈந்த புலிகளின் நினைவாக நடத்தப்படும் நிகழ்ச்சி. மாவீரர் தினம் கண்டிப்பாக நடத்தப்படவேண்டிய மிக முக்கியமான நிகழ்வு. ஆனால், அந்த நிகழ்வுக்கு இலங்கை அரசே அனுமதி கொடுத்தாலும், கண்டிப்பாக இந்திய அரசு அனுமதி தராது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி இந்த ஆண்டு அங்கு நடைபெற்றது. ஆனால், இங்கு தமிழ்நாட்டில் நடத்த முடியவில்லை. சென்னை மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்த காவலர்களால் அனுமதி மறுக்கப்பட்டு நாங்கள் விரட்டியடிக்கப்பட்டோம். அந்த அளவுக்குத் தமிழீழ மக்கள் நலன் தொடர்பாகவோ, பிரபாகரன் தொடர்பாகவோ இங்கு யாரும் பேசக்கூடாது என்பதில் இந்திய அரசு அதிக அக்கறை காட்டி வருகிறது. தமிழீழ தமிழர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்கள்மீதும் இந்தியாவுக்கு மிகப்பெரிய வெறுப்பு இருக்கிறது. அதன் காரணமாகத்தான் இந்தியா எப்போதும் தமிழர்களுக்கு எதிராகவே செயல்பட்டுவருகிறது."

தமிழீழத் தமிழர்களின் வாழ்க்கை எப்போது மேன்மைப்படும்?"

விடுதலைப்புலிகள்

தமிழர்கள் அங்கு சுயமரியாதையோடும், பாதுகாப்போடும் வாழ வேண்டும் என்றால், தனி தமிழீழம் மலர்ந்தால் மட்டுமே அது சாத்தியம். மற்றபடி, புதிய அரசியல் சாசனத்தில் தமிழர்களுக்கான நலன் இருக்கிறது என்பதெல்லாம் சர்வதேச நாடுகளை ஏமாற்றக் கூறப்படும் பொய். முதலில் அந்தப் புதிய அரசியல் சாசனத்தை எரிக்கவேண்டும். கடந்த 2012-ம் ஆண்டுமுதல் தற்போதுவரை இலங்கையின் அரசியல் சாசனத்தை எரித்து வருகிறோம். நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். இலங்கையின் புதிய அரசியல் சாசனம் இன்னும் அதிக அளவு இன்னல்களைத் தமிழர்களுக்கு வழங்குமே தவிர, ஒருபோதும் தமிழர்களுக்கு நன்மை செய்யாது."

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.