Header Ads

குப்பை மேட்டில் சடலமாக மீட்கப்பட்ட குழந்தை..! பக்கத்துவீட்டு பெண்ணே கொன்றது உறுதியானது!

சென்னை அருகே குப்பைமேட்டில் சடலமாக மீட்கப்பட்ட குழந்தை காவ்யாவை, பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் கொலை செய்தது, போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சென்னை வில்லிவாக்கம் பாரதி நகர் இரண்டாவது தெருவை சேர்ந்த வெங்கடேசன். பாரிமுனை பகுதியில் உள்ள பழக்கடை ஒன்றில் பணிபுரிந்து வரும் இவருக்கு, காவ்யா என்ற 3 வயது பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், வெங்கடேசன் மனைவி ஜெயந்தி தனது பெண் குழந்தை காவ்யாவை வீட்டின் உள்ளே வைத்து வெளிப்பக்கமாக கதவை தாழிட்டு, அருகிலுள்ள கடைக்கு சென்றுள்ளார்.

பின்னர் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்த நிலையில், குழந்தை காவ்யாவை காணவில்லை.  இதனையடுத்து, வெங்கடேசன் மற்றும் அவரது உறவினர்கள் அனைத்து இடங்களிலும் தேடியும், குழந்தை கிடைக்கவில்லை.

இதனால் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து உறவினர்கள் குழந்தையை தேடிய நிலையில், வீட்டின் அருகே உள்ள குப்பைமேட்டில் குழந்தை காவ்யா சடலமாக கண்டெடுக்கப்பட்டாள். வெங்கடேசன் மனைவி ஜெயந்திக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வரும் தேவி என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததால், தேவி மற்றும் அவரது கணவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

இந்நிலையில், ஜெயந்தி குடும்பத்துடன் ஏற்பட்ட சண்டைக்கு பழிவாங்குவதற்காக, குழந்தை காவ்யாவை, தேவியே கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தேவியை போலீசார் கைது செய்தனர். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.