Header Ads

3 மாதம் பிச்சைக்காரராக வாழ்ந்த கோடீஸ்வரர், பிச்சைக்காரன் படத்தையே மிஞ்சிய உண்மை சம்பவம்..

திருவண்ணாமலை மாவட்டம், செஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். பெரிய கோடீஸ்வரரான இவர் விவசாய குடும்பத்தில் பிறந்து, தனது கடுமையான உழைப்பால் முன்னேறியவர்.

இவருக்கு மனைவியும்,மூன்று மகன்களும் உள்ளனர். ஒரு மகனுக்கு மட்டும் திருமணம் ஆகி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வீட்டில் அவருக்கும், அவரது மருமகளுக்கும் தகராறு ஏற்பட்டது.

அவரது மருமகள் திட்டியதால் கோபத்துடன், தனது மனைவி மற்றும் மகன்களிடம் எதுவும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு, பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த நடராஜன், கடைசியாக காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரில் உள்ள முருகன் கோவிலுக்கு வந்தார். இந்த கோவில்அவருக்கு பிடித்து விட்டதால் அங்கேயே தங்க ஆரம்பித்தார்.


அந்த கோயிலில் வழங்கப்படும் அன்னதானம் மற்றும் அங்கு வரும் பக்தர்கள் வழங்கும் அன்னதானத்தை சாப்பிட்டு நாட்களை கடத்தினார். கடந்த மூன்று மாதங்களாக, பிச்சைக்காரராகவே அங்கு தங்கி வாழ்ந்து வந்தார்.

இதற்கிடையில், காணாமல் போன நடராஜனை, அவருடைய மனைவி மற்றும் மகன்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால் நடராஜனை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில், அவரின் மனைவி மற்றும் மகன்கள் அவர் இருந்த முருகன் கோவிலுக்கு காரில் வந்துள்ளனர். கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு அருகே உள்ள ஹோட்டலுக்கு சாப்பிட சென்றனர்.
அப்போது, தாடியோடு தங்களது தந்தையை போல் ஒருவர் அங்குள்ள மண்டபத்தில் அமர்ந்து இருப்பதை கண்ட அவருடைய மகன்கள், அருகே சென்று பார்த்தனர்.


அங்கு,தங்களுடைய தந்தை நடராஜன் பிச்சைக்காரர் போல் அமர்ந்து இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மகன்கள் மூன்று பேரும் தங்களது தந்தையை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
அதற்குள், காரில் அமர்ந்து இருந்த நடராஜனின் மனைவியும், தனது கணவர் கிடைத்து விட்டதை அறிந்து காரில் இருந்து அவசர அவசரமாக கீழே இறங்கி ஓடிவந்தார். அங்கு தனது கணவரின் நிலைமையை கண்டு அவர் கதறி அழுதார்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பார்த்து, கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் அங்கே இருந்த பொதுமக்களும் கண் கலங்கினர்.அதன் பிறகு நடராஜனிடம், அவருடைய மகன்கள் மன்னிப்பு கேட்டு தங்களுடன் வீட்டுக்கு வரும்படி கெஞ்சினார்கள்.

தனது குடும்பத்தினரின் கண்ணீரை பார்த்து கோபம் தணிந்த நடராஜன், அவர்களுடன் வீட்டுக்கு வர சம்மதம் தெரிவித்தார்.

அதன் பின்னர், அங்குள்ள சலூன் கடையில் முடிவெட்டி, முக சவரம் செய்துகொண்டு நடராஜன் புதுமனிதராக மனைவி மற்றும் மகன்களுடன் காரில் ஏறி சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.