Header Ads

துபாயில் மனைவி, குழந்தைகள் தவிப்பு: ஏர்லைன்ஸ் மீது தவான் குற்றச்சாட்டு..

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 5-ந்தேதி கேப் டவுனில் தொடங்குகிறது. இதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று முன்தினம் (27-12-2017) நள்ளிரவு மும்பையில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன் மூலமாக துபாய் சென்றது.

பின்னர் துபாயில் இருந்து தென்ஆப்பிரிக்கா புறப்பட்டு நேற்றிரவு தென்ஆப்பிரிக்கா சென்றடைந்தது. இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் தங்களது குடும்பத்தை தங்களுடன் அழைத்துச் சென்றனர். இந்திய அணியின் தொடக்க வீரர் தவான் தனது மனைவி, குழந்தைகளுடன் சென்றார்.

தவான் மும்பையில் இருந்து துபாய்க்கு சென்று அங்கிருந்து தென்ஆப்பிரிக்கா செல்ல ஏற்பாடு செய்திருந்தார். தென்ஆப்பிரிக்காவிற்கு அனைவரும் புறப்பட தயாராக இருந்த நிலையில், தவானின் மனைவி மற்றும் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் மற்றும் சில ஆவணங்கள் வேண்டும் என்று எமிரேட்ஸ் ஏர்லைன் நிர்வாகிகள் கேட்டுள்ளனர். இதற்கான ஆவணங்கள் ஏதும் தவானிடம் இல்லை. இதனால் நிறுவனம் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை தென்ஆப்பிரிக்கா புறப்பட மறுத்து விட்டது.



இதனால் துபாயில் இருந்து தென்ஆப்பிரிக்காவிற்கு தவான் தனியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தனது குடும்பத்தை துபாயில் தவிக்க விட்டு தனியாக சென்ற தவான், எமிரேட்ஸ் ஏர்லைன் நிறுவனம் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தவான் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இது முற்றிலும் எமிரேட்ஸின் தொழில்முறைக்கு உகந்ததாக இல்லை. தென்ஆப்பிரிக்காவிற்கு துபாயில் இருந்து புறப்படும்போது எனது மனைவி, குழந்தைகளை அனுமதிக்கவில்லை. எனது குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் மற்றும் சில ஆவணங்கள் கேட்டனர். புறப்பட தயாராகும் நிலையில் இது ஏற்க தக்கதல்ல.

எனது குடும்பம் ஆவணங்களாக்காக துபாயில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மும்பையில் இருந்து நான் எனது குடும்பத்துடன் துபாய் புறப்பட்டபோது ஏன் இதுபோன்று ஆவணங்களை கேட்கவில்லை?. எமிரேட்ஸ் ஏர்லைன் நிறுவனத்தின் ஊழியர் எந்தவொரு காரணமம் இல்லாமல் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார்’’ என்று பதவிட்டுள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.