Header Ads

விடுதலைப் புலிகளின் வெற்றியை, திருப்பிப் போட்ட சுனாமி..

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்குமான போர் 2005இல் தொடங்கப்படவிருந்த ஒன்று. ஆனால் 2004 ஆம் ஆண்டு இதே நாளில் ஏற்பட்ட சுனாமிப் பேரலை களத்தை திசை திருப்பியது. சுனாமி நிகழ்ந்திராவிடில் 2009 அழிவும் நிகழ்ந்திருக்காது. சுனாமி மக்களை அழித்தது மட்டுமன்றி களத்தை திசைதிருப்பி ஈழ வரலாற்றையே மாற்றிப்போட்டது.

கடந்த 2004 ஆம் ஆண்டு தலைவர் பிரபாகரனின் மாவீரர்நாள் உரை மிக முக்கியமான ஒன்று. இலங்கையில் முக்கியமான மாற்றங்களை எதிர்கொண்ட ஆண்டு அது. புலிகள் போருக்கு தயார் என்பதை அன்றைய உரையில் சூசகம் உரைத்திருந்தார் தலைவர் பிரபாகரன். அந்த உரையின் இறுதிப்பகுதி பின்வருமாறு அமைந்திருந்தது,

"இடைக்காலத் தீர்வுமின்றி, நிரந்தரத் தீர்வுமின்றி, நிலையான அமைதியுமின்றி, நிம்மதியான வாழ்வுமின்றி, நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்க முடியாது. சிங்களத் தேசமானது தமிழினத்தை அரவணைத்து, இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம், பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. இரண்டுங் கெட்டான் நிலையில் விடிவின்றி, விடுதலையின்றி, எதிர்காலச் சுபீட்சமின்றி சூனியமான அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்து வாழமுடியாது. பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லைக்கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்து விட்டோம். இந்த நெருக்கடியான சூழ்நிலையிற் சிறீலங்கா அரசுக்கு நாம் அவசரமான அழைப்பு ஒன்றை விடுக்க விரும்புகின்றோம். அதாவது, நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தின் அடிப்படையில், நிபந்தனையற்ற முறையில், காலந் தாமதிக்காது பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து, காலத்தை இழுத்தடித்து, எமது மக்களின் துயர வாழ்வை நீடித்துச் செல்ல சிங்கள அரசு முற்படுமானால், நாம் எமது தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. எமது இந்த இக்கட்டான நிலையை, தமிழரின் இனப்பிரச்சினையில் அக்கறையுடைய உலக நாடுகள் கருத்தில் எடுத்து, எமது நியாயமான நிலைப்பாட்டின் அடிப்படையிற் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்கும்படி சிறீலங்கா அரசிற்கு அழுத்தம்கொடுக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்."

புலிகள் போருக்கு தயார் என்பதை தலைவர் மேற்கண்டவாறு சூசகமுரைத்ததன் காரணம் 2003 இல் விடுதலைப்புலிகளால் சமர்ப்பித்த இடைக்கால தீர்வு வரைபு அன்றைய சனாதிபதியாக இருந்த சந்திரிகாவினால் நிராகரிக்கப்பட்டமையும் அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுமே. விடுதலைப் புலிகளின் வரைபிற்கேற்ப ரணில் (பிரதமர்) தலைமையிலான UNP அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என ஆதரவு தெரிவித்திருந்தது.

ஆனால் நிறைவேற்று அதிகாரமுள்ள சனாதிபதியாக இருந்த சந்திரிகா அதை அடியோடு நிராகரித்தது மட்டுமன்றி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ரணில் வசமிருந்த பாதுகாப்பு அமைச்சர் உட்பட நான்கு அமைச்சுக்களை தானே எடுத்துக்கொண்டார். அத்தோடு பாராளுமன்றத்தையும் கலைத்துவிட்டு UNP அரசாங்கத்தைக் கவிழ்த்தார். மீண்டும் பொதுத்தேர்தல் 2004 ஏப்ரல் மாதம் நடந்ததில் அன்று கடுமையான இனவாதத்தை கக்கிவந்த JVP மூன்றாவது பெரும் சக்தியாக உருவெடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மிண்டுகொடுத்து நாட்டின் ஆட்சியதிகாரத்தை மாற்றியது.

விடுதலைப் புலிகளோடு சமரசம் மேற்கொண்டால் தமது கூட்டணியை விலக்கிக்கொள்ள நேரிடும் என சந்திரிகாவை மிரட்டியது ஜே.வி.பி. இந்தப் பின்னணியில்தான் சமாதானத்துக்கான கதவுகள் பூட்டப்படும் அறிகுறிகள் தென்பட்டன. ஜே.வி.பியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்த இனவாதிகளும் சந்திரிகாவை சமாதானம் வேண்டாம் என மிரட்டியவண்ணமே இருந்தனர். இதன் தொடர்ச்சியாகவே தலைவர் பிரபாகரன் போருக்கான ஆயத்தங்களை மேற்கொள்கிறார்.

நிர்வாகப் பணிகளை பெரும்பாலும் காவல்துறையினரே கவனித்துவந்த நிலையில் அரசியல்துறைப் போராளிகள் எல்லைப்படையினர், துணைப்படையினர் உட்பட கணிசமான போராளிகள் புலிகளின் மரபுவழி இராணுவப் படையணிகளோடு இணைக்கப்பட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து புலிகளின் முன்னரங்குகள் பலப்படுத்தப்படுகின்றன; வடபோர்முனையில் புலிகளின் மரபுவழி இராணுவ படையணிகள் தீவிர ஆயத்தங்களில் ஈடுபடுகின்றன; தாக்குதல் உந்து செலுத்திகள் நிலையெடுக்கின்றன; அதேபோல் தெற்கே ஓமந்தையிலும் மன்னாரிலும் மணலாறிலும் படையினரின் முன்னேற்றத்தைத் தடுக்கும் ஏற்பாடுகள் பூர்த்தியாகின; அனைத்தும் பூர்த்தியாகி தலைமையின் கட்டளைக்காக காத்திருந்தபோதே அந்த கொடூரம் நிகழ்கிறது. பெருமளவு மக்கள் பலியெடுக்கப்பட்டார்கள். கடற்புலிகளுக்கும் குறிப்பிடத்தக்க அழிவுகளும் இழப்புக்களும் ஏற்பட்டன.

இந்த நிலையிலும் புலிகள் விரைந்து செயற்பட்டு மீட்பு பணிகளையும் மீள்கட்டுமானப் பணிகளையும் சில நாட்களுக்குள்ளேயே மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்தனர். கனரக மீட்பு இயந்திரங்கள் அற்ற நிலையிலும் முற்றிலும் மனித உழைப்பையே நம்பி துரிதமாக செய்துமுடித்தார்கள். இது ஒரு புறம் இருக்க, அன்றைய சந்திரிகா அரசாங்கமோ தமது கட்டுப்பாட்டு பிரதேசங்களை சுனாமி அழிவிலிருந்து மீட்டெடுக்க தலையைப் பிய்த்துதறிக்கொண்டிருந்தது. சர்வதேசத்திடம் உதவியை நாடியிருந்தது. சர்வதேசத்திலிருந்து வந்த உதவிகளை அரச கட்டுப்பாடு-புலிகள் கட்டுப்பாடு பிரதேசங்களுக்கென பிரித்துக்கொடுக்கும் 'சுனாமிக் கட்டமைப்பை' கூறுபோடுவதில் இழுத்தடிப்புச் செய்து இறுதியில் ஏமாற்றியது!

குறுகிய நேரத்துள் கொத்துக்கொத்தாக மக்களை அழித்தொழித்தது கடல். போருக்காக கருக்கட்டிய மேகங்களை அன்றைய ஆழிப்பேரலை கலைத்தது. களமுனையையே மாற்றிப்போட்டது. கிழக்கு கரையை அழித்த கடல் இன்னும் இதே கரையில் அழிவீர்கள் என சாபமிட்டுச் சென்றது.

அன்று சுனாமி நிகழாதிருந்திருந்தால் புலிகளின் கை ஓங்கியிருக்கும். அன்றைய படை வலுச் சமநிலையில் புலிகளின் போரியல் உத்திகளும் கடல் தரை தாக்குதல் அணிகளும் இலங்கையின் முப்படைகளைவிட சற்று பலமாயிருந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டை முற்றுகையிட்டு முழுமையாக கைப்பற்றிவிட்டு வங்கக் கடலில் தமது கடல் ஆதிக்கத்தின்மூலம் தடையின்றிய ஆயுத வழங்கலை ஏற்படுத்தியபின் ஏனைய பகுதிகளை மீட்பதே புலிகளின் திட்டமாக இருந்தது. அதற்கான சரியான நேரமாகவும் இன்றை நாட்கள் அமைந்திருந்தன. ஆனால் சுனாமி வந்து அனைத்தையும் குழப்பியது.

அதன் பின்னரான இலங்கையின் அரசியல் மாற்றங்கள் பாதுகாப்புக்கென நாட்டின் பொருளாதாரத்தின் பெரும்பகுதியை தாரைவார்த்தது. இராணுவக் கட்டமைப்புக்குள் வளர்ந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் இராணுவத் தளபதியும் புலிகளின் பலம் என்ன பலவீனம் என்ன என்பதை நன்கு அறிந்து இராணுவப் பற்றாலியன்களைப் பெருக்கினர்.

தம்மை கடல்போலே முற்றிகையிட்டு வந்த படையணிகளை புலிகளின் உச்சக்கட்ட வியூகங்கள் சற்று தாமதிக்க வைத்தனவேயன்றி எதிர்பார்த்த பலாபலன்களை அடையமுடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவந்த தமது பகுதிகளை மீட்பதற்கான இறுதிக்கட்ட வீயூகமும் மாபெரும் தளபதிகளோடு ஆனந்தபுரத்தில் தோற்றுப்போனது! ஆம் சுனாமி கோரமாகத் தொடக்கி வைத்த அழிவை முள்ளிவாய்க்கால் அகோரமாக முடித்துவைத்தது!

1 comment:

  1. கடவுள் நின்று கொள்வான் , சுனாமிக்கு மிகவும் நன்றி

    ReplyDelete

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.