Header Ads

சகஜமாய் பேசும் சைக்கோக்கள்.. அந்தரங்கமாய் பழகியவர்களுக்கே அர்த்தம் புரியும்.. பெண்களே உஷார்..

சமீபத்தில், ஒரு கோடி ரூபாய் வரதட்சணை கொடுத்து, சைலஜா என்ற எம்.பி.ஏ. படித்த பெண்ணை, அவளது பெற்றோர் ஆசிரியராகப் பணி புரியும் ராஜேஸ் என்பவனுக்குத் திருமணம் செய்து கொடுத்திருக்கின்றனர்.
பெண் வீட்டார் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள். அதனால் தான் ஒரு கோடி ரூபாய் வரை வரதட்சணை கொடுத்துள்ளனர்.
மணவிழா, இனிதாக நடைபெற்றிருக்கிறது. மணவிழாவிற்கு வந்தவர்களிடம் எல்லாம் மணமகன் ராஜேஸ் அமைதியாக, புன்முறுவலுடன் சிரித்துப் பேசியிருக்கிறான்.
திருமணம் முடிந்த இரவு. எல்லாப் பெண்களுக்கும் உண்டான பலவித வண்ணக் கனவுகளுடன் சைலஜா முதல் இரவு அறைக்குள் நுழைந்திருக்கிறாள்.
தாலி கட்டிய கணவன், அவளை எப்படி எல்லாம் கொஞ்சுவான் என்று கிண்டலடித்த தோழிகளின் கூற்றையே, மனதிற்குள் அசை போட்டுக் கொண்டு, முதல் இரவு அறைக்குள் நுழைந்த சைலஜாவிற்கு காத்திருந்தது, அதிர்ச்சி மட்டுமல்ல. அடியும் தான்.
உள்ளே அந்தப் பெண் நுழைந்தவுடன், அறையைத் தாழிட்டு விட்டு, ராஜேஸ் சைலஜாவைக் கண்மூடித்தனமாகத் தாக்கத் துவங்கியுள்ளான். என்ன நடக்கிறது, என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியாத படி, அதிர்ச்சியில் நடுநடுங்கிப் போனாள் சைலஜா. சுதாரிப்பதற்குள், தொடர்ந்து அடி மேல் அடி என அடித்துக் கொண்டேயிருந்திருக்கிறான்.
இதை விடக் கொடுமை என்னவென்றால், இந்தக் கிறுக்கன், சைலஜாவின் மர்ம உறுப்பில் கையால் குத்தியும், காலால் தொடர்ந்து எத்தியும், அந்தப் பெண்ணை நிலை குலைய வைத்திருக்கிறான்.
பின் பழங்களை நறுக்குவதற்காக வைத்திருந்த கத்தியை எடுத்து, கண் மண் தெரியாமல் அந்தப் பெண்ணின் உடலில், பல இடங்களில் கீறி காயப் படுத்தியிருக்கிறான்.
அந்தப் பெண் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, கதவைத் திறந்து வெளியே வந்து கத்திக் கூப்பாடு போட்டவுடன், அந்தப் பெண்ணின் பெற்றோர் தங்களது மகளின் நிலையைக் கண்டு, அதிர்ச்சி அடைந்தனர்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த மகளை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். பின் அவரது உடல் நிலை மோசமானதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.
எந்தப் பெண்ணும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத கொடுமை இது. இந்த சம்பவம் அவளது பெற்றோரை மிகப் பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஊரே மெச்ச நடந்த கல்யாணம், உலகமே, அதிர்ச்சியாகப் பார்க்கும் படி ஆகி விட்டதே, என்று இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருக்கிறார்கள்.
மணமகன் ராஜேஸ் மிகப் பெரிய சைக்கோ என்தனை இப்போது தான் உணரத் துவங்கியுள்ளனர்.
காவல் துறையினர் ராஜேசைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இத்துடன் அவர்கள் ராஜேசின் பெற்றோரையும் விசாரிக்க வேண்டும்.
அவன் ஒரு சைக்கோ, போதையால் மதியிழந்தவன் என்பதை மறைத்து, பணத்திற்காக ஆசைப்பட்டு, ஒரு கோடி ரூபாய் வரதட்சணை பெற்ற, அவனது பெற்றோரே முதல் குற்றவாளிகள்.
இந்த மாதிரியான சைக்கோக்கள் சமுதாயத்தில், நம்முடன் சகஜமாகப் பழகி வருகின்றனர். இவர்கள் இன்ன மாதிரியான குணநலம் படைத்தவர்கள் என்பதை, இவனுடன் நன்கு அந்தரங்கமாகப் பழகியவர்களுக்கும், பெற்றவர்களுக்கும் மட்டும் தான் தெரியும்.
அப்படித் தெரிந்தவுடன், அவனை மனநோய் மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளிப்பதை விட்டு விட்டு, ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்த, முதல் குற்றவாளிகள், சந்தேகமில்லாமல் அவனது பெற்றோர்கள் தான்.
வெளியே காட்டிக் கொடுக்காத மித மிஞ்சிய போதையில் இருக்கும், இவனைப் போன்றவர்கள், மெல்ல மெல்ல சைக்கோக்களாக மாறி விடுகிறார்கள்.
  “சாடிஸ்ட்” என்று ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு. பிறரைத் துன்புறுத்தி, அதைப் பார்த்து ரசிப்பவன் என்று பொருள். அந்த மாதிரியான சாடிஸ்ட் தான் இந்த மாதிரியான ராஜேஸ்கள்.
தன்னை விட வலிமையில் குறைவாக இருப்பவர்களிடம், தனது கொடூரத்தனத்தைக் காட்டுவார்கள். இந்த ராஜேசிடம் விசாரித்தால் பல உண்மைகள் வெளி வரும்.
இவன் இது போல, வேறு பலரிடமும், இதற்கு முன்பாக பலரிடம், இந்த மாதிரி நடந்திருப்பான். அதனால், எத்தனை பேர் பாதிக்கப் பட்டுள்ளனர் என்பதை விசாரித்தால் தான் தெரியும்.
இது அத்தனைக்கும் காரணம், நான் ஏற்கனவே பல முறை திரும்ப திரும்பச் சொல்லும், பல விதமான போதை வஸ்துக்கள் தான். இந்தப் போதை தான் வாழ்க்கையின் பாதையையே மாற்றுகிறது!

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.