Header Ads

ரூபிக் கியூப் புதிர் போட்டி: புதிய கின்னஸ் சாதனை படைத்த சென்னை..

ஹங்கேரியைச் சேர்ந்த கட்டடக் கலைப் பேராசிரியர் எர்னோ ரூபிக் என்பவர் 1974-ம் ஆண்டில் ஒரு புதுமையான, புதிரான கன சதுரத்தை உருவாக்கினார். இதை உடைக்கவோ பிரிக்கவோ முடியாது. ஆனால், தனித்தனியாகச் சுற்றும் வகையில் அது அமைக்கப்பட்டிருந்தது. இதில் வண்ணமயமான ஸ்டிக்கர்களை ஒட்டி இதை ஒரு விளையாட்டுப் பொருளாக்கினார். முதலில் உருவாக்கப்பட்ட ரூபிக் கன சதுரம் (Rubik's Cube) இதுதான்.

ஒரே மாதிரியான நிறங்களை ஒரே பக்கத்தில் கொண்டுவந்து தனது புதிரை விடுவிக்க அவருக்கு ஒரு மாதம் ஆனது. இதன்பின்னர் உலகத்திலேயே மிக அதிகமாக விற்பனையாகும் விளையாட்டுப் பொருளாக ரூபிக் கன சதுரத்தை உருவாக்க ஆசைப்பட்டார். ஒரு சில மாற்றங்களை இதில் ஏற்படுத்திய பின்னர் மிகவும் பிரபலமான விளையாட்டுப் பொருளானது ரூபிக் கன சதுரம்.

முதலில் தனது மாணவர்களிடமும் நண்பர்களிடமும் எர்னோ ரூபிக் இதை அறிமுகப்படுத்தினார். முதன்முதலில் பொலைட்செனிகா என்னும் நிறுவனம் ரூபிக் கன சதுரத்தைத் தயாரித்து வர்த்தகரீதியாக விநியோகித்தது.

தொடக்க காலத்தில் தயாரிக்கப்பட்ட ரூபிக் கன சதுரம் ‘மாஜிக் க்யூப்’ என அழைக்கப்பட்டது. எடையும் இரு மடங்கு அதிகமாக இருந்தது. ஹங்கேரியில் பிரபலமாகியிருந்த இந்த ரூபிக் கன சதுரத்தைக் கணித அறிஞர்கள் உலகெங்கும் நடைபெற்ற கருத்தரங்குகளுக்குக் கொண்டுசென்றனர்.

1979-ம் ஆண்டு நுரெம்பெர்க் விளையாட்டுப் பொருள் கண்காட்சியில் இது இடம்பெற்றது. அப்போது அங்கே வந்திருந்த டாம் க்ரெமெர் என்னும் விளையாட்டுப் பொருள் நிபுணர், உலகம் முழுவதிலும் இதை விற்கச் சம்மதித்தார். இதைத் தொடர்ந்து ஐடியல் டாய் நிறுவனம், மேஜிக் க்யூப் என்னும் பெயரை ரூபிக் நினைவாக ‘ரூபிக் க்யூப்’ என மாற்றி விநியோகித்தது.

1980-ல் இது உலகச் சந்தையில் அறிமுகமானது. அந்த ஆண்டு ஜெர்மனியின் சிறந்த விளையாட்டுக்கான விருதைப் பெற்றது. உலகத்தில் இதுவரை விற்பனையான ரூபிக் கன சதுரத்தின் எண்ணிக்கை சுமார் 35 கோடி. இன்று உலகத்தில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் விளையாட்டுப் பொருளும் இதுதான்.

இந்தப் புதிரை விடுவித்து அனைத்து வண்ணங்களை கொண்ட கன சதுர கட்டங்களையும் முறையாக ஒழுங்குப்படுத்தி ரூபிக் கியூப் புதிரை விடுவிப்பதில் நிமிடங்களையும் கடந்து வினாடிகள் கணக்கில் பல்வேறு உலக சாதனைகள் இதுவரை நிகழ்த்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஒரே இடத்தில் மிக அதிகமானவர்கள் ஒன்றுகூடி ரூபிக் கியூப் புதிரை விடுவித்து, புதிய உலக சாதனையை ஏற்படுத்திய நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடந்தேறியது.

சென்னை பெரம்பூர், கொளத்தூர், அயனாவரம் பகுதிகளில் இயங்கிவரும் கலிகி ரங்கநாதன் மான்போர்ட் பள்ளியை சேர்ந்த சுமார் 4 ஆயிரம் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் ஆகியோர் ஒன்றுசேர்ந்து கடந்த 27-1-2018 அன்று சென்னை சென்ட்ரல் அருகே உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் இந்த சாதனையை நிகழ்த்தினர்.

ஒரே இடத்தில் மிக அதிகமானவர்கள் ஒன்றுகூடி ரூபிக் கியூப் புதிரை விடுவித்த இந்த புதிய சாதனையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.