Header Ads

ஒருவர் படத்தை மற்றவர் சமூக ஊடகங்களில் வெளியிடத் தடை’..விவாகரத்துக்கு சுப்ரீம் கோர்ட் நிபந்தனை..

ஒருவர் படத்தை மற்றவர் சமூக ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஒரு தம்பதியருக்கு சுப்ரீம் கோர்ட்டு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பொறியியல் மற்றும் மேலாண்மை பட்டதாரியான இவருக்கும் அவரது மனைவிக்கும் ஒத்து போகவில்லை. ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்டனர். ஒருவர் மீது மற்றொருவர் புகார் செய்வது, வழக்கு தாக்கல் செய்வது என பிரச்சினைகள் தொடர்ந்தன.

முடிவில் இவர்களது விவாகரத்து வழக்கு, சுப்ரீம் கோர்ட்டுக்கு போனது.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, அவர்களின் விவாகரத்து வழக்கை விசாரித்தது.

தம்பதியரில் மனைவியின் சார்பில் மூத்த வக்கீல் துஷ்யந்த் பராசர் ஆஜராகி வாதாடினார். அவர் தனது வாதத்தின்போது, “பெண்ணுக்கு கணிசமான நிரந்தர ஜீவனாம்சம் வழங்க வேண்டும்” என்றார். இரு தரப்பு வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு, அந்த தம்பதியருக்கு விவாக ரத்து வழங்கி உத்தரவிட்டது.

அதே நேரத்தில் பல்வேறு நிபந்தனைகளையும் தம்பதியருக்கு விதித்தது. அது வருமாறு:-

* விவாகரத்து வழங்கப்படுகிற கணவன், மனைவியுடைய படத்தையும், மனைவி, கணவனுடைய படத்தையும் எந்த தருணத்திலும், எங்கும் வெளியிடக்கூடாது. சமூக ஊடகங்களிலும், இணையதளங்களிலும் கூட வெளியிடக்கூடாது.

* தங்களது திருமண வாழ்வின் சர்ச்சைகளை தம்பதியர் உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டும்.

* இருவரது விவாகரத்து மனுக்களும் முடிவுக்கு வந்து விட்டதால், இனி எதிர்காலத்தில் கணவன், மனைவியிடமோ, மனைவி, கணவனிடமோ எந்த கோரிக்கையையும் வைக்கக்கூடாது.

* இந்த வழக்கில் கணவன், மனைவி இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் கூறிய குற்றச்சாட்டுகள், ஆவணங்களில் இருந்து நீக்கப்படும். அதாவது, இதில் அவர்கள் சான்றளிக்கப்பட்ட நகல்களை பெற முடியாது.

இவ்வாறு கணவன், மனைவி இருவருக்கும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளது.

அதே நேரத்தில் அவர்களது திருமணம் இனி செல்லாது என்று அறிவித்த சுப்ரீம் கோர்ட்டு, மனைவிக்கு கணவர் ரூ.37 லட்சத்தை நிரந்தர ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும் இருவரும் ஒருவர் மீது மற்றவர் தொடுத்த வழக்கு, அது திருமண விவகாரமானாலும் சரி, சொத்து விவகாரமானாலும் சரி, கிரிமினல் பிரச்சினை என்றாலும் சரி அவை அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.