Header Ads

ஜெயலலிதா படத்துடன் கட்சி பெயர் பலகையை அறிமுகம் செய்த டி.ஆர்.

நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர், லட்சிய தி.மு.க. என்ற அரசியல் கட்சியை பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார். இடையில் தி.மு.க.வுடன் இணைந்தும் செயல்பட்டார்.

தற்போது ரஜினி, கமல் அரசியலுக்கு வந்ததைத் தொடர்ந்து தானும் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாகவும், இது தொடர்பாக முக்கிய அறிவிப்பை 28-ந்தேதி (இன்று) வெளியிடுவேன் என்றும் டி.ராஜேந்தர் கூறியிருந்தார்.

அதன்படி இன்று டி.ராஜேந்தர் நிருபர்களை சந்தித்தார். அப்போது தனது கட்சியின் புதிய பெயர் பலகையை அறிமுகம் செய்தார். அதில் பெரியார், அண்ணா படங்களுடன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம் பெற்று இருந்தன.

கடந்த 24-ந்தேதி ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அவரது படத்துக்கு டி.ராஜேந்தர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது, நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்.

அதன்பிறகு டி.ராஜேந்தர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர். கொள்கைகளை தாங்கிப்பிடித்த அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா இல்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்று சிலர் கட்சி தொடங்குகிறார்கள். இது காலத்தின் கட்டாயம்.

ம.தி.மு.க.வை வைகோ தொடங்கி தி.மு.க.வை உடைத்த போது கருணாநிதி கேட்டுக் கொண்டதால் 7 ஆண்டுகளுக்கும் மேலாக நான் அரும்பாடு பட்டு நடத்திய தாயக மறுமலர்ச்சி கழகத்தை தி.மு.க.வோடு இணைத்தேன்.

அதன்பிறகு தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளராக பல ஆண்டுகள் பணியாற்றிய என்னை அடிப்படை உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கவில்லை என்று உப்பு சப்பு இல்லாத காரணத்தைச் சொல்லி தி.மு.க.வில் இருந்து நீக்கியதால் 2004-ம் ஆண்டு லட்சிய தி.மு.க.வை தொடங்கினேன். அதன்பின்னர் 2006ம் ஆண்டு கலைஞர் முதல்வர் ஆவதற்காக உழைத்தவன். அதற்காகத்தான் கலைஞரால் மாநில சிறுசேமிப்பு துறை துணைத்தலைவர் ஆக்கப்பட்டவன்.

கடைசியாக 2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கலைஞர் கைப்பட எழுதி ஒரு அறிக்கை கொடுத்தார். அதில், ‘அன்புத்தம்பி டி.ராஜேந்தர், என் அன்பு அழைப்பினை ஏற்று என் விருப்பப்படி மீண்டும் கழகத்தில் இணைந்துள்ளதை வரவேற்கிறேன். தம்பி, நம் உறவும் நட்பும் என்றும் நிலைத்திட வாழ்வோம்’ என கையெழுத்து போட்டு அந்த நகலை கொடுத்தார்.

கலைஞர்தான் என்னை அழைத்தார். தி.மு.க.விலே என்னை இணைக்க நினைத்தார். நல்ல உயர் பதவி போட்டுத் தருகிறேன் என்று வாக்களித்தார். இடையிலே அதை தடுத்தது யார்? கலைஞரின் திட்டத்தை கெடுத்தது யார்? இதில் யார் மீதும் எனக்கு கோபம் இல்லை.

தி.மு.க.வுக்காக பலகாலம் உழைத்த எம்.ஜி.ஆரும் தி.மு.க.விலேதான் இருக்க வேண்டும் என தாக்குப் பிடித்துப் பார்த்தார். முடியவில்லை. ஒரு காலகட்டத்தில் தூக்கி எறியப்பட்டார். ஒரு விதத்தில் பார்த்தால் எனக்கும் அப்படித்தான் ஒரு நிலைமை. நான் தி.மு.க.விற்கு பயன்பட்டு தூக்கி எறியப்பட்ட கறிவேப்பிலை, பரவாயில்லை.

பெரியாருக்கும், அண்ணாவிற்கும், எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் பெற்றெடுத்த பிள்ளைகள் இல்லை. இந்த நால்வர் ஆன்மாக்களின் நல்ல கொள்கைகளுக்கு, நான் ஒரு தத்துப்பிள்ளை.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.