Header Ads

தாய் கண் முன்பு மகள் வெட்டிக் கொலை..

ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் மாதாங்கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோகுல லட்சுமி (வயது 32). இவரும், பெரியகடை பஜாரைச் சேர்ந்த நவீன்தாஸ் (36) என்பவரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வந்த நவீன்தாஸ் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் பிரச்சினை செய்துள்ளார். மேலும் நடத்தையிலும் சந்தேகம் அடைந்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்த கோகுல லட்சுமி தனது 2 குழந்தைகளுடன் 6 மாதங்களுக்கு முன்பு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். நவீன்தாஸ் மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வரவில்லை. மேலும் குழந்தைகளையும் பார்க்க விடாமல் தடுத்ததாக தெரிகிறது. இதனால் நவீன்தாஸ் ஆத்திரத்தில் இருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோகுல லட்சுமி தளவாய்புரத்தில் உள்ள தனியார் செல்போன் கடைக்கு வேலைக்கு சென்றார். இதையறிந்த நவீன்தாஸ் மகளை வேலைக்கு அனுமதிக்கக்கூடாது எனவும், மீறி சென்றால் கொலை செய்து விடுவேன் என்றும் மாமியாரிடம் கூறியுள்ளார்.

ஆனாலும் கோகுல லட்சுமி வேலைக்கு சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த நவீன்தாஸ் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார்.

நேற்று மதியம் கோகுல லட்சுமி செல்போன் கடையில் தனியாக இருந்தார். அப்போது அங்கு தனது நண்பர்கள் கோவிந்தன் (33), துளசிராமன் (32) ஆகியோருடன் வந்த நவீன்தாஸ், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.

இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரம் அடைந்த நவீன்தாஸ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த கோகுல லட்சுமி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் குருவத்தாய் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நவீன்தாஸ் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்தனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.