Header Ads

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை தாக்கியவர் ‘திடீர்’ மரணம்.. அ.தி.மு.க.தான் காரணம்..

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசிங் தெருவை சேர்ந்தவர் வசந்தமணி என்கிற மணிகண்டன் (வயது 41). மேடை அலங்காரம் செய்யும் தொழிலாளி. போளூர் ரெயில் நிலைய ரோட்டில் சி.டி. வாடகைக்கு விடும் கடை வைத்திருந்தார்.

கலசபாக்கம் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் நிகழ்ச்சிகளுக்கு வசந்தமணி மேடை அலங்காரம் செய்து வந்தார். அவருக்கு எம்.எல்.ஏ. ரூ.20 ஆயிரம் பணம் தரவேண்டி இருந்தது.

பணத்தை கேட்டபோது அவருக்கும் எம்.எல்.ஏ.வுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 21-ந்தேதி இரவு வசந்தமணி பணத்தை கேட்பதற்காக போளூர் வசந்தம் நகரில் உள்ள பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வீட்டுக்கு சென்றார்.

அங்கு எம்.எல்.ஏ. இல்லாததால் வசந்தமணி ஆத்திரமடைந்தார். எம்.எல்.ஏ. வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை அவர் கல்லால் தாக்கி உடைத்தார்.

அதன்பிறகு போளூரில் உள்ள அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. சென்றதை அறிந்தார். அந்த திருமண மண்டபத்திற்கு விரைந்து சென்றார்.

பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. அவரது ஆதரவாளர்களுடன் காரில் இருந்து இறங்கி திருமண மண்டபத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வசந்தமணி ஆசி பெறுவதுபோல் அவரது காலில் விழுந்தார். திடீரென அவர் எம்.எல்.ஏ.வின் இரு கால்களையும் வாரி கீழே தள்ளினார். தடுமாறி தரையில் சாய்ந்த பன்னீர்செல்வம் முகத்தில் குத்தினார்.

அப்போது வசந்தமணி கையில் இருந்த மோதிரம் அவரது உதட்டை கிழித்தது. இதனை கண்டு திடுக்கிட்ட எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் வசந்தமணியை தாக்கினர்.

காயமடைந்த எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தை போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின் வீடு திரும்பினார்.

எம்.எல்.ஏ.வை தாக்கியதாக வசந்தமணியை போலீசார் கைது செய்தனர். அவரை வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

கடந்த 23-ந்தேதி இரவு வசந்தமணிக்கு சிறுநீருடன் ரத்தம் கலந்து சென்றது. இதையடுத்து அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 25-ந் தேதி மாலை வரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அன்று இரவு மீண்டும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

26-ந்தேதி காலையில் ஜெயில் வளாகத்தில் வசந்த மணி திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். ஜெயில் அதிகாரிகள் அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார், உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தீவிர சிகிச்சை பிரிவில் சுயநினைவின்றி வசந்த மணி உள்ளதாகவும், விரைவில் நினைவு திரும்புவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். டாக்டர்கள், செவிலியர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

நேற்று முன்தினம்  அவரது உடல் நிலை மிகவும் மோசமானது. நேற்று அதிகாலை வசந்த மணி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் போளூர் மற்றும் வேலூர் சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

போளூரில் வசந்தமணியின் உறவினர்கள் திரண்டனர். இதைத் தொடர்ந்து வசந்தம்நகரில் உள்ள பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இறந்த வசந்தமணிக்கு சுமித்ரா என்ற மனைவியும், ஷாலினி (வயது 11), வெற்றி (5) என்ற குழந்தைகளும் உள்ளனர்.

வசந்தமணி மரணம் குறித்து சுமித்ரா போளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. அவரது டிரைவர் சதா மற்றும் 10 பேர் சேர்ந்து எனது கணவரை தாக்கினர். இதனால் பலத்த காயமடைந்த அவர் இறந்துவிட்டார். எனது கணவரை தாக்கிய எம்.எல்.ஏ. உள்பட 10 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்னை சென்றார். அவர் அங்கேயே தங்கியுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

வசந்தமணியின் உடல் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி மற்றும் உறவினர்கள் போளூரில் உள்ளனர்.

அவர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து போளூரில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.