Header Ads

ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற மீனவர்கள் 500 பேர் கரை திரும்பவில்லை..

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் தற்போது புயல் மையம் கொண்டுள்ளது.
இதனால் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
குமரி மாவட்டத்தில் சின்ன முட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம், முட்டம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு ஆயிரக்கணக்கான விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகிறார்கள்.
மேலும் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள 48 கடலோர கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் வள்ளம், கட்டுமரம் போன்றவை மூலம் கரையோரங்களில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
புயல் எச்சரிக்கையை தொடர்ந்து கடலுக்கு சென்ற வள்ளம், கட்டுமர மீனவர்கள் கரை திரும்பிவிட்டனர். விசைப் படகுகள் மூலம் ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் தொடர்ந்து கரை திரும்பியவண்ணம் உள்ளனர். அவர்கள் இன்னும் முழுமையாக கரை திரும்ப வில்லை.
விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் குமரி மீனவர்கள் நடுக்கடலில் 10 நாட்களுக்கு மேல் தங்கியிருந்து மீன் பிடித்துவிட்டு கரை திரும்புவது வழக்கம். இந்த மீனவர்கள் 150 முதல் 300 கடல் நாட்டிக்கல் மைல் தொலைவு வரை ஆழ் கடலுக்கு சென்று மீன்பிடிப்பார்கள். இவர்கள் 15 நாட்கள் முதல் 1 மாதம் வரை கூட கடலில் தங்கி இருந்து மீன்பிடித்துவிட்டு கரை திரும்புவார்கள்.
தூத்தூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 40 படகுகளில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஆனால் அவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. புயல் காரணமாக தூத்தூர் மீனவர்களை வயர்லஸ் மூலமும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவர்களது கதி என்ன? என்று தெரியாத நிலை உள்ளது. இதன் காரணமாக அவர்களது உறவினர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் குமரி மாவட்டத்தை ஒகி புயல் தாக்கியபோது 23 மீனவர்கள் உயிரிழந்தனர். மேலும் கடலுக்கு சென்ற 139 பேர் பற்றிய எந்தவொரு தகவலும் இதுவரை இல்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் அந்த சோகத்தில் இருந்து இன்னும் மீளமுடியாமல் உள்ளனர்.
ஒகி புயலின் போதும் தூத்தூர் பகுதியை சேர்ந்த மீனவர்களே அதிகளவு பலியாகினர். தற்போதும் ஆழ்கடலுக்கு சென்ற தூத்தூர் மீனவர்கள் 500 பேர் கரை திரும்பாதது அவர்களது குடும்பத்தினரை மேலும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்த மீனவர்கள் பத்திரமாக கரை திரும்ப இந்திய கப்பல் படை மற்றும் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நெய்தல் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் மெர்லின் கூறியதாவது:-
தற்போது புயல் உருவாகி உள்ளதை தொடர்ந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை கரை திரும்ப தமிழக அரசும், மீன் வளத்துறை அதிகாரிகளும் துரித நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் கரையோரங்களில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கரை திரும்பி வருகிறார்கள். இது பாராட்டுக்குரியது.
அதேசமயம் தூத்தூர் மீனவர்கள் ஆழ்கடலில் 300 நாட்டிக்கல் வரை விசைப்படகில் சென்று மீன் பிடிப்பதால் அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே விமானம் மற்றும் ஹெலிகாப்டர், கப்பல்கள் மூலம் அவர்களை தொடர்பு கொண்டு பத்திரமாக கரை திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒகி புயலின் வடு இன்னும் முழுமையாக மறையாத சூழ்நிலையில் இது அனைவரையும் கவலைக் கொள்ளச் செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே குமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு சென்ற 51-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கர்நாடகா, கோவா மற்றும் லட்சத்தீவில் உள்ள துறைமுகங்களில் கரை ஒதுங்கி இருப்பதாக தமிழக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதில், 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். அவர்களை குமரி மாவட்டம் அழைத்து வர ஏற்பாடு நடப்பதாக வருவாய் நிர்வாக ஆணையர் கூறி உள்ளார்.
இன்னும் கரை திரும்பாத மீனவர்கள் தூத்தூர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் என மீனவ அமைப்புகள் தெரிவித்தனர். இந்த மீனவர்கள் கரையில் இருந்து சுமார் 500 கடல் மைலுக்கு அப்பால் மீன்பிடிக்க செல்பவர்கள்.
இவர்களுக்கு புயல் பற்றிய தகவல் தெரிந்திருக்காது என்றும், இவர்களில் சுமார் 600 பேர் இருக்கலாம் எனவும் மீனவ அமைப்பினர் கூறினர். அவர்களை கரைக்கு அழைத்து வர முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் மீனவ அமைப்பினர் தெரிவித்தனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.