Header Ads

‘ஜி.எஸ்.எல்.வி’. - எப்8 ராக்கெட் 29-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது..

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தகவல்தொடர்பு வசதிக்காகவும், பருவநிலை மாற்றத்தை அறிவதற்காகவும் ஜிசாட்- 6ஏ என்ற செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது.

இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அதாவது வருகிற 29-ந்தேதி மாலை 4.56 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி.- எப்8 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணுக்கு செலுத்துகிறது.

இது ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் 12-வது ராக்கெட்டாகும். இதில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 6-வது கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது.

ஜி.எஸ்.எல்.வி- எப்8 ராக்கெட் 3 நிலைகளை கொண்டதாகும். முதல் நிலையில் திடஎரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு இருக்கிறது. 3-வது நிலையில் முழுவதும் உள்நாட்டில் இந்திய விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது.

49.1 மீட்டர் உயரம் கொண்ட ஜி.எஸ்.எல்.வி.- எப்8 ராக்கெட்டின் எடை 415.6 டன் ஆகும். இதில் அனுப்பப்படும் 2,140 கிலோ எடை கொண்ட ஜிசாட்- 6ஏ செயற்கைகோள் பூமியில் இருந்து அதிகபட்சமாக 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலும், குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர் தூரத்திலும் கொண்ட சுற்றுப்பாதையில் பூமியை சுற்றிவர இருக்கிறது.

ஜிசாட்- 6ஏ செயற்கைகோளில் ‘எஸ்.பேண்ட்’ தகவல்தொடர்பு வசதிக்காக இஸ்ரோ புதிதாக 6 மீட்டர் விட்டத்தில் மிகப்பெரிய ‘ஆன்டெனா’ ஒன்றை பொருத்தி உள்ளது. இஸ்ரோ தயாரித்த ‘ஆன்டெனா’க்களிலேயே இது மிகவும் பெரியதாகும். செல்போன் போன்ற மிகச்சிறிய மின்னணு சாதனங்களிலிருந்து அனுப்பப்படும் சிக்னல்களையும் முழுமையாக பெற்று தரும் வசதியை இந்த ‘ஆன்டெனா’ ஏற்படுத்தி தரும்.

மேலும் தகவல் தொடர்பு மற்றும் காலநிலை மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள இதுபேருதவியாக இருக்கும். இது இந்திய விஞ்ஞானிகளின் மிகப்பெரிய சாதனையாகும். ராக்கெட்டை ஏவுவதற்கான இறுதி கட்டபணியான ‘கவுண்ட்டவுன்’ நாளை (புதன்கிழமை) தொடங்க வாய்ப்பு உள்ளது. ஜிசாட்-6ஏ செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.

மேற்கண்ட தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.