Header Ads

ஜெயிலில் சிறப்பு உணவு கேட்டு அடம்பிடிக்கும் பெண் நக்சலைட்..

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை போலீஸ் நிலையம் மீது கடந்த 2002-ம் ஆண்டு நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் தலைமறை வாகினர். லீனா ஜாய்ஸ்மேரி என்ற பெண் நக்சலைட் காஞ்சீபுரம் அடுத்த படப்பையில் உள்ள டெக்ஸ்லைட் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

ரகசிய தகவலின்பேரில், கடந்த 2016-ம் ஆண்டு ‘க்யூ’ பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள லீனா ஜாய்ஸ் மேரிக்கு தைராய்டு பிரச்சினை உள்ளது. எனவே, அவருக்கு வழக்கமாக வழங்கப்படும் உணவுடன் கீரை, பால், முட்டை உள்ளிட்ட சிறப்பு உணவுகளும் வழங்கப்பட்டன.

இதற்கிடையே, அவருக்கு வழங்கிய சிறப்பு உணவுகள் திடீரென நிறுத்தப்பட்டன. இந்த நிலையில், தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு பால், முட்டை, கீரை உள்ளிட்ட உணவுகளை மீண்டும் வழங்க வேண்டும் என்று லீனா ஜாய்ஸ் மேரி சில நாட்களுக்கு முன்பு மனு அளித்திருந்தார்.

அந்த மனு நிராகரிக்கப்பட்டது. தற்போது, வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக ஜெயபாரதி பொறுப்பேற்றுள்ளார். அவரிடம், தனக்கு சிறப்பு உணவு வழங்க வேண்டும் என்றுக் கோரி லீனா ஜாய்ஸ் மேரி மீண்டும் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

வேலூர் பெண்கள் ஜெயிலில் பல்வேறு குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்ட 88 பெண் குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், 4 பெண் கைதிகளுக்கு மட்டும் பால், முட்டை, கீரை போன்ற சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நக்சலைட் லீனாஜாய்ஸ்மேரி, தனக்கும் பால், முட்டை போன்ற சிறப்பு உணவுகள் வழங்க வேண்டும் என 2 வது முறையாக சிறைத்துறை நிர்வாகத்திடம் அளித்துள்ள மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

லீனா ஜாய்ஸ் மேரிக்கு மருத்துவப் பரிசோதனை செய்து, அவருக்கு சிறப்பு உணவு வழங்கலாம் என்று டாக்டர்கள் பரிந்துரை செய்தால் மட்டுமே சிறப்பு உணவுகள் வழங்கப்படும் என்று சிறைத்துறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.