Header Ads

ரஜினி கட்சி தொடங்க பா.ஜனதா அழுத்தம் கொடுக்கிறதாக குற்றச்சாட்டு..!

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி தென் சென்னை தெற்கு மாவட்டத்தில் 20 நாட்கள் 151 நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

தொடக்க நாள் விழாவாக அனைத்து கட்சி தலைவர்களின் வாழ்த்தரங்கம் சைதாப்பேட்டை  தேரடி திடலில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார்.

இது இளைஞர் எழுச்சி நாள். மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெறும் ஆட்சியை தூக்கி எறிய இளைஞர்கள் எழுச்சி பெற்றாக வேண்டும்.

மத்தியில் ஒரு மதவாத ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் செயல்படாத ஒரு பக்கவாத ஆட்சி நடக்கிறது. தன்னை அடையாளம் காட்டியவரை, அம்மா, தாயே என்று துதிபாடியவரை, இழந்து ஒரு வருடத்துக்குள் அ.தி.மு.க. வினர் மறந்து விட்டார்கள். அவரது முகம் கூட இப்போது அவர்களுக்கு நினைவில்லை. அதனால்தான் ஜெயலலிதா சிலை அப்படி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பாக செயல்படுவதாக மத்திய அரசு 12 விருது வழங்கி இருக்கிறதாம். போக்குவரத்து கழகங்கள் என்ன லட்சனத்தில் இருக்கிறது என்பது நமக்குத் தானே தெரியும். பஸ்கள் பேரீச்சம் பழத்துக்கு போடும் நிலையில்  உள்ளன.

அமித்ஷா மகன் அடித்த கொள்ளையை கண்டு கொள்ளவில்லை. ஆனால் பா.ஜனதா அரசின் முறைகேடுகளை ப.சிதம்பரம் புள்ளி விவரத்துடன் விமர்சனம் செய்வதால் திட்டமிட்டு அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்துள்ளார்கள்.

மு.க.ஸ்டாலின் பெரிய மனதுக்கு சொந்தக்காரர் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது ஆளும் முதல்-அமைச்சரும் கீழ்நிலையில் இருந்து உயர்ந்த இடத்துக்கு வந்திருப்பவர்தான். ஆனால் ஏதாவது செய்தது உண்டா? இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.

வடக்கில் இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் பெற்று வரும் வெற்றி மக்கள் மோடியை தூக்கி எறிய தயாராகி விட்டார்கள் என்பதை காட்டுகிறது. மத்தியில் ராகுல்  பிரதமர் ஆவதும் தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வர் ஆவதும் உறுதி.

ஆன்மீக அரசியல் என்று ரஜினி பூச்சாண்டி காட்டுகிறார். 30 வருடத்துக்கு முன்பு செய்ய வேண்டியதை இப்போது  செய்கிறார். இவர்கள் மக்களுக்கு என்ன செய்வார்கள்? தமிழக மக்கள் மீது கொண்ட அக்கறை காரணமா? இல்லை தமிழகத்தை முன்னேற்ற வேண்டிய லட்சியமா? எதுவும் கிடையாது. கையில் இருக்கிற படங்கள் நன்றாக ஓட வேண்டும். மனைவி செய்த தவறுக்கு தீர்வு காண வேண்டும். அவ்வளவுதான்.

பா.ஜனதா கொடுக்கும் அழுத்தத்தால் இப்படியெல்லாம் பேசுகிறார். அவர் வருவதும் தெரியாது. போவதும் தெரியாது. நிச்சயமாக அரசியல் கட்சி தொடங்கவே மாட்டார்.

இவ்வாறு  அவர் பேசினார்.

முன்னதாக கிருஷ்ண மூர்த்தி வரவேற்றார். தி.மு.க. நிர்வாகிகள் கோதண்டன், களக்காடி எல்லப்பன், கோட்டூர் சண்முகம், பாலவாக்கம் சோமு, சைதை அன்பரசன், வேளச்சேரி மணிமாறன், விசுவநாதன், காங்கிரஸ் நிர்வாகிகள் வி.ஆர். சிவராமன், நாஞ்சில் பிரசாத், கடல் தமிழ்வாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.