Header Ads

பா.ஜ.க.வுக்கு எதிராக புதிய வியூகம்- சோனியாவின் புதிய முயற்சி..

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) தேர்தல் வர இருப்பதால், அதை எதிர்கொள்ள பா.ஜ.க.வும், காங்கிரஸ் கட்சியும் தயாராகத் தொடங்கியுள்ளன.
சமீபத்தில் வடகிழக்கு மாநிலங்களில் நடந்த தேர்தலில் பா.ஜ.க. பெற்ற வெற்றி காங்கிரசை மிரள வைத்துள்ளது.
குறிப்பாக தேர்தல் நடந்த 3 மாநிலங்களில் 2 மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. திரிபுராவில் 1.8 சதவீதம் வாக்குகளையே காங்கிரசால் பெற முடிந்தது. எனவே காங்கிரசுக்கு புத்துயிர் கொடுக்க “புதிய வியூகம்“ வகுக்கும் அதிரடி நடவடிக்கைகளில் சோனியா ஈடுபட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியை இனி வரும் தேர்தல்களில் வீழ்த்த வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே அணியில் கொண்டு வர வேண்டும் என்று சோனியா திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் நாடு முழுவதிலும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு டெல்லியில் விருந்து கொடுக்க சோனியா ஏற்பாடு செய்தார். அந்த விருந்து இன்றிரவு நடைபெற உள்ளது. இதில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், விருந்தில் பங்கேற்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தனது பிரதி நிதியை அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முகம்மது சலீம், டி.கே. ரங்கராஜன் கலந்து கொள்கிறார்கள்.
தி.மு.க. சார்பில் கனிமொழி விருந்தில் பங்கேற்கிறார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் டி.ராஜா, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சதீஷ் சந்திர மிஸ்ரா, சமாஜ்வாடி சார்பில் ராம்கோபால் யாதவ், ராஷ்டீரிய ஜனதா தளம் சார்பில் லல்லு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் சரத்யாதவ் கலந்து கொள்ள உள்ளார்.
மொத்தம் 17 கட்சிகளின் தலைவர்கள் இந்த விருந்தில் கலந்து கொள்ள உள்ளனர். விருந்தின்போது 2019-ம் ஆண்டு தேர்தலில் எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் நின்று போட்டியிட வேண்டியதன் அவசியத்தை சோனியா வலியுறுத்தி பேசுவார். இதில் ஒருமித்த கருத்து ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2019 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. - காங் கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஈடுபட்டார். அவருக்கு தெலுங்கானா கட்சி தலைவர் சந்திரசேகரராவ் ஆதரவு அளித்தார். அந்த மூன்றாவது அணியில் தேசியவாத காங்கிரஸ், தி.மு.க. ஆகிய கட்சிகளையும் இடம் பெற செய்ய மம்தா பானர்ஜி முயன்றார்.
இதைத் தெடர்ந்தே மாநில கட்சிகளை காங்கிரஸ் பக்கம் திருப்பும் வகையில் சோனியா விருந்துக்கு ஏற்பாடு செய்தார். இந்த விருந்து மூலம் தேசிய அளவில் புதிய கூட்டணிக்கு சோனியா வலுவான அடித்தளம் அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சோனியாவின் முயற்சிக்கு வெற்றி கிடைக்குமா? என்பது சரத்பவார், மம்தா பானர்ஜி ஆகியோர் அளிக்க உள்ள பதிலைப் பொருத்தே இருக்கும். இந்த மாத இறுதியில் சரத்பவார் தனியாக எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளார்.
சரத்பவார் கூட்டும் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்கப் போவதாக அறிவித்துள்ளார். அந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைமையில் ஒன்று சேர்ந்து 2019-ம் ஆண்டு தேர்தலை சந்திப்பதா? அல்லது மூன்றாவது அணி அமைப்பதா? என்பதை முடிவு செய்ய உள்ளனர்.
எனவே சரத்பவார், மம்தா பானர்ஜி எடுக்க போகும் முடிவைப் பொருத்தே சோனியா விருந்து வெற்றி பெறுமா? என்பது தெரிய வரும்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.