Header Ads

லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் மணமகளின் தந்தை உள்பட 7 பேர் பலி..

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் தாடிபத்ரி அருகே உள்ள வெங்கடாபல்லி பகுதியை சேர்ந்தவர் பிரசாத் (வயது 55). இவரது மகளுக்கு, காளஹஸ்தியில் திருமணம் நடக்க இருந்தது. இதற்காக, நேற்று மாலை பிரசாத் உறவினர்கள் 10 பேருடன் காளஹஸ்திக்கு வேனில் புறப்பட்டார்.

கடப்பா அடுத்த புல்லம்பட்டு என்ற இடத்தில் சென்ற போது, கடப்பா நோக்கி எதிரே வந்த லாரி, வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் திருமண கோஷ்டி சென்ற வேன் முற்றிலும் நொறுங்கி உருகுலைந்தது.

வேனில் இருந்த மணமகளின் தந்தை பிரசாத் மற்றும் அவருடைய உறவினர்களான சிவா (45), இவரது மனைவி பாக்கியலட்சுமி (40), லட்சுமி (55), ரங்கம்மா (40), இவரது மகள் சரஸ்வதி (20) மற்றும் காயத்திரி (11) என்ற சிறுமி என மொத்தம் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

மேலும், 4 பேர் பலத்த காயமடைந்தனர். உயிருக்கு போராடிய அவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கடப்பா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மணமகள் மற்றும் சிலர் வேறு காரில் வந்ததால் அவர்கள் விபத்தில் இருந்து தப்பினர்.

இந்த கோர விபத்து குறித்து, புல்லம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.