Header Ads

சிரியாவுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்க பயன்படுத்தவுள்ள ஆயுதங்கள் என்ன ? இதோ அதிரடி ரிப்போர்ட்




சிரியாவிற்கு எதிரான தாக்குதலிற்கு அமெரிக்கா நாசகாரிகளையும் நீர்மூழ்கிகளையும் பயன்படுத்தலாம் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி சி.என். என். செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் சி.என்.என். மேலும் தெரிவித்துள்ளதாவது:

டொம்ஹவுக் ஏவுகணைகளுடன் இரண்டு அமெரிக்க நாசகாரிகள் உத்தரவிற்காக காத்திருக்கின்றன. அதேபோன்று அமெரிக்க ஜனாதிபதி சிரியா மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான உத்தரவை பிறப்பித்தால் தாக்குதலை மேற்கொள்வதற்கான தயார் நிலையில் போர்விமானங்களும் ஏனைய ஆயுதங்களும் தயார் நிலையில் உள்ளன. புதிய நவீன ஏவுகணைகள் சிரியாவை நோக்கி செல்லும் என அறிவித்துள்ளதன் மூலம் டிரம்ப் தனது சகாக்களை கூட ஆச்சரியப்படுத்தியுள்ளார்.



தாக்குதலை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்காவிற்கும் அதன் மேற்குலக சகாக்களிற்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா சிரியாவின் கடற்பகுதியில் நீர்மூழ்கிகளை நிறுத்தியிருக்கலாம் அதனை பயன்படுத்தி நவீன ஏவுகணைகளை செலுத்தக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டிரம்பின் சிரேஸ்ட அதிகாரிகள் வெள்ளை மாளிகையில் சிரியாவிற்கு எதிராக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.



சிரியா மீது ஏவுகணை தாக்குதல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வெள்ளை மாளிகை செயலாளர் சராசாண்டெர்ஸ் தெரிவித்துள்ளார்.சிரியா சமீபத்தில் மேற்கொண்ட இரசாயன தாக்குதல் குறித்த புலனாய்வு தகவல்களை இன்னமும் சேகரித்து வருவதாக தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் டிரம்ப் உத்தரவு வழங்கினால் தாக்குதலை ஆரம்பிப்பதற்கான தயார் நிலையில் அமெரிக்க இராணுவம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அமெரிக்காவின் செய்மதிகளும் புலனாய்வு பணிகளில் ஈடுபட்டுள்ள விமானங்களும் சிரிய ஜனாதிபதி பசார் அல் அசாத்தையும் சிரியாவில் உள்ள ரஸ்ய படையணிகளையும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.  தாக்குதல் இடம்பெறலாம் என கருதப்படும் இடங்களில் இருந்து இரசாயன ஆயுதங்கள் போர்த்தளபாடங்களை சிரியாவும் ரஸ்யாவும் இடமாற்றுகின்றனவா என்பதையே அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.





No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.