Header Ads

பரதேசியாக இருந்து பத்தாயிரம் கோடிக்கு அதிபதி ஆன ஆசாராம் பாபு..

வெள்ளையர் ஆட்சிக்காலத்தின்போது பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்திற்குட்பட்ட பெரானி என்னும் கிராமத்தில் 1941-ம் ஆண்டு பிறந்தவர் அசுமால் சிருமலானி. 1947-ம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் தனது பெற்றோருடன் குஜராத் மாநிலத்துக்கு சிறுவனாக வந்த அசுமால் சிருமலானி மணிநகரில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

பத்தாவது வயதில் நான்காம் வகுப்பில் படித்து வந்தபோது அசுமால் சிருமலானியின் தந்தை தவ்மால் மரணம் அடைந்ததால் பள்ளிப் படிப்புக்கு முழுக்குப்போட்டார். சிறுவனாக இருந்தபோது கூலி வேலை, குதிரை வண்டி ஓட்டுவது உள்பட பல வேலைகளை செய்துவந்தபோது துறவறம் கொள்ளும் ஆசையில் இமயமலை அடிவாரத்துக்கு சென்றார்.

பல ஆண்டுகாலம் அங்கு பரதேசியாக சுற்றித்திரிந்து லிலாஷா பாபு என்பவரை தனது ஆன்மிக குருவாக ஏற்றுகொண்டார். அசுமால் சிருமலானி என்னும் பெயரை ஆசாராம் பாபு என்று மாற்றிய அவரது குருநாதர், நீ இனிமேல் உன் பாதையில் சென்று மக்களுக்கு வழிகாட்டலாம் என்று 1964-ம் ஆண்டில் ஆசிவழங்கி அனுப்பி வைத்தார்.

1970-ம் ஆண்டுவாக்கில் மீண்டும் குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்துக்கு ஆசாராம் பாபுவாக திரும்பிவந்த அசுமால் சிருமலானி, பின்னர் சபர்மதி ஆற்றங்கரை ஓரத்தில் சிறியதாக ஒரு குடிசைபோட்டு ‘மோக்‌ஷா குதிர்’ என்று அதற்கு பெயரிட்டார். அங்கிருந்தவாறு உள்ளூர் மக்களுக்கு தியானம் உள்ளிட்ட மனவளக்கலை தொடர்பான பயிற்சிகளை அளித்து பிரபல ஆன்மிகவாதியாக உயர்ந்தார்.

இவரது பெயர் உள்ளூரை கடந்து மாவட்டம், மாநில அளவில் பரவ ஆரம்பித்த பின்னர், ஆசாராம் பாபுவின் சிறிய குடிசை பெரிய ஆசிரமமாக வளர்ந்தது. தலைநகர் டெல்லி உள்பட நாடு முழுவதும் ஆசாராம் பாபுவின் ஆசிரமம் என்ற பெயரில் சுமார் 400 பிரமாண்ட கிளைகள் பெருகத் தொடங்கின.

லக்‌ஷ்மி தேவி என்பவரை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையிலும் ஈடுபட்டுவந்த இவருக்கு நாராயண் சாய் என்னும் மகனும், பார்தி தேவி என்னும் மகளும் உள்ளனர். நாராயண் சாய் தற்போது கற்பழிப்பு வழக்கில் சிறையில் அடைபட்டுள்ளார்.
பக்தர்கள் காணிக்கையாக கொட்டிக்கொடுத்த பணத்தை வைத்து ஏராளமான நிலங்களையும், கட்டிடங்களையும் சொந்தமாக்கி கொண்ட ஆசாராம் பாபு, பிரபல நிறுவனங்களின் பங்குகளையும் வாங்கி மூலதனத்தை பெருக்கி கொண்டார்.

மேலும் ஆயுர்வேத தயாரிப்புகள் மற்றும் ஆன்மிக புத்தகங்கள் மூலமாகவும் அவரது காட்டில் பணமழை பொழிந்தது. பாகிஸ்தானில் இருந்து பரதேசியாக குஜராத் மாநிலத்துக்கு வந்த ஆசாராம் பாபுவின் இன்றைய சொத்து மதிப்பு சுமார் ஆயிரம் கோடி என தெரியவந்துள்ளது.

இந்தியாவின் பிரபல ஆன்மிகவாதிகளில் ஒருவர் என்ற வகையில் குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வி.வி.ஐ.பி. அந்தஸ்துடன் மிடுக்குடனும், செருக்குடனும் பவணிவந்த ஆசாராம் பாபு கடந்த 2008-ம் ஆண்டு முதன்முதலாக சிக்கலில் மாட்டினார்.

சபர்மதி ஆற்றங்கரையோரத்தில் உள்ள அவரது ஆசிரமத்தில் தங்கி இருந்த இரு சிறுவர்களின் பிரேதம் ஆற்றோரம் கிடந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மந்திர-தந்திரம், சூனியம், வசியம் உள்ளிட்ட துர்காரியங்களுக்காக அவர்கள் நரபலியாக ஆசாராம் பாபுவால் கொல்லப்பட்டதாக செய்திகள் பரவியது.

இதுதொடர்பான வழக்கில் இருந்து ஆசாராம் பாபு சில அதிகாரம் மிக்க சக்திகளால் காப்பாற்றப்பட்டார். அவரது ஆசிரமத்தை சேர்ந்த 7 சீடர்கள் மீது மட்டும் குஜராத் மாநில சி.ஐ.டி. போலீசார் கடந்த 2009-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். 
ஆனால், இதில் இருந்து தப்பிய ஆசாராம் பாபு ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள தனது ஆசிரமத்தில் தங்கி படித்துவந்த இரு சிறுமிகளை கற்பழித்த வழக்கிலும், உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மற்றொரு சிறுமியை கற்பழித்த வழக்கிலும் வசமாக சிக்கிக் கொண்டார். இதுதொடர்பான வழக்கு விசாரணை அகமதாபாத் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

சில மாநிலங்களில் முக்கிய பகுதிகளில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்குகளிலும் ஆசாராம் பாபு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவரது மகன் நாராயண் சாய் மீதும் சட்டப்பூர்வமாக அடைத்து வைத்தல், கற்பழிப்பு உள்ளிட்ட குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சிறுமியை கற்பழித்த வழக்கில் உத்தரப்பிரதேசம் ஆசாரம் பாபுவை சாகும் வரை சிறையில் அடைக்கவும், அவரது கூட்டாளிகள் இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.