Header Ads

மதுபானக்கடைகளை மூடக்கோரி மாணவன் தற்கொலை..

நெல்லை வண்ணார் பேட்டையில் தெற்குபைபாஸ் ரோட்டில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் தண்டவாளத்துக்கு மேலே அந்தரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையா, சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அந்த வாலிபர் உடல் பாலத்தில் இருந்து நயிலான் கயிற்றில் சுமார் 30 அடி உயரத்தில் தொங்கி கொண்டு இருந்ததால் உடலை உடனடியாக மீட்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு பாளை தீயணைப்பு அதிகாரி (பொறுப்பு) செல்வராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்தனர். அவர்கள் அந்தரத்தில் தொங்கிய அந்த வாலிபர் உடலை கயிறு கட்டி கீழே இறக்கினர்.

அந்த வாலிபர் தனது முதுகில் டிராவல் பேக் மாட்டியிருந்தார். அதில் தான் யார்? எதற்காக தற்கொலை செய்கிறேன் என்று விபரமாக எழுதி வைத்து இருந்தார். போலீசார் அந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதன் விபரம் வருமாறு:-

தற்கொலை செய்த வாலிபர் பெயர் தினேஷ் நல்லசிவன் (வயது17). நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள் பட்டியில் உள்ள கே.ரெட்டியபட்டி கிராமத்தை சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் ஆவார்.

தினேஷ் நல்லசிவன் தற்போது தான் பிளஸ்-2 தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்தான். அதில் நல்ல மதிப்பெண் எடுத்து, நீட் தேர்விலும் நல்ல மதிப்பெண் எடுத்து டாக்டர் ஆவதே லட்சியம் என்று படித்து வந்துள்ளான். ஆனால் மாணவன் தினேஷ் நல்லசிவனின் தந்தை மாடசாமி தினசரி வீட்டுக்கு மது குடித்து விட்டு வந்து மனைவி மற்றும் மகன்களிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இது தினேஷின் படிப்புக்கு மிகவும் இடையூறாக இருந்தது மட்டுமின்றி, அவரது மனதை மிகவும் பாதித்தது. இதனால் தினேஷ் தனது தந்தையிடம் ‘மது குடிக்க கூடாது’ என்றும், குடிக்காமல் தன்னை டாக்டருக்கு படிக்க வைக்க முயற்சி செய்யுங்கள் என்று கூறி வந்துள்ளார். ஆனால் மாணவன் தினேஷ்சின் தந்தை மாடசாமி அதை கேட்காமல் தினசரி குடித்து விட்டு வந்துள்ளார்.

இதனால் கடும் போராட்டத்துக்கு இடையே தினேஷ் பிளஸ்-2 எழுதி முடித்துவிட்டு, அவரது சித்தப்பா மணி என்பவரது உதவியுடன் ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பம் செய்து படித்து வந்தார். நீட் தேர்வு எழுத தினேசுக்கு பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தில் உள்ள ஒரு பள்ளி மையத்தில் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதற்கான ஹால் டிக்கெட்டும் வந்தது.

இந்த நிலையில் தொடர்ந்து தினேசின் தந்தை மாடசாமி குடித்து விட்டு வந்து தகராறு செய்ததால் தினேஷால் ‘நீட்’ தேர்வுக்கும் சரியாக படிக்க முடியாமல் அவதிப்பட்டார். இதனால் அவர் தன் தந்தையிடம் இனி குடித்து விட்டு வந்தால் நான் தற்கொலை செய்து விடுவேன் என்று கூறியுள்ளார். ஆனால் அவரது தந்தை மாடசாமி, விளையாட்டாக சொல்கிறான் என்று நினைத்து விட்டார். தனது மகன் கூறுவதை ஒரு பொருட்டாக கருதாமல் வழக்கம் போல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.

இதனால் மனம் உடைந்த தினேஷ் நேற்று நள்ளிரவு வீட்டை விட்டு வெளியேறினார். சங்கரன் கோவிலில் இருந்து நெல்லை வரும் பஸ்சில் ஏறி நெல்லை புதிய பஸ் நிலையம் வந்தார். அங்கிருந்து வண்ணார் பேட்டை பை-பாஸ் ரோடு வழியாக நடந்து ரெயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள தண்டவாளத்துக்கு வந்துள்ளார்.

ஆனால் அந்த வழியாக இரவு எந்த ரெயிலும் போகாது. இதனால் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்யும் முடிவை கைவிட்டு விட்டான். பின்னர் மேம்பாலத்தின் மேல் பகுதியில் செல்லும் ரோட்டிற்கு சென்று, பாலத்தின் கைப்பிடியில் நைலான் கயிற்றை கட்டி தனது கழுத்தில் தூக்கு மாட்டிக்கொண்டு அங்கிருந்து கீழே குதித்தார். இதில் கழுத்து இறுகி அந்த இடத்திலேயே இறந்து விட்டார்.

போலீசார் விசாரணையில் மேற்கண்ட அதிர்ச்சி தகவல் கிடைத்தது. இதுகுறித்து பாளை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை குடிப்பழக்கத்தால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெல்லையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவன் தினேஷ் தனது கைப்பையில் உருக்கமாக ஒரு கடிதம் எழுதி வைத்து இருந்தான். அதில் அவன் எழுதியிருப்பதாவது:-

அப்பா, நான் தினேஷ் எழுதுவது. நான் செத்து போனதுக்கு அப்புறமாவது நீ குடிக்காம இரு. நீ குடிக்கிறதால எனக்கு கொள்ளி வைக்காதே, மொட்டை போடாதே, நீ எனக்கு காரியம் பண்ணாத. சித்தப்பா மணி அப்பா தான் பண்ணனும். இது தான் என் ஆசை. அப்ப தான் என் ஆத்மா சாந்தி அடையும்.



இனிமேலாவது இந்தியாவிலும் பிரதமரும், தமிழகத்தில் முதல்-அமைச்சரும் மதுக்கடைகளை அடைக்கிறார்களா என்று பார்ப்போம். இல்லை என்றால் நான் ஆவியாக வந்து மதுபான கடைகளை ஒழிப்பேன்.

இவ்வாறு எழுதி கையெழுத்திட்டு தனது சித்தப்பா, அப்பா, மாமா ஆகியோரது செல்போன் நம்பரையும் எழுதி வைத்துள்ளான்.

இது தொடர்பாக பாளை போலீசார் மாணவன் தினேஷ்சின் தந்தை மாடசாமி, சித்தப்பா மணி மற்றும் உறவினர்களை அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்த தினேஷ்சின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர். டாக்டராக வேண்டியவன் இப்படி செய்து விட்டானே’ என்று கதறியது பார்ப்போர் நெஞ்சை உருக்கியது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.