Header Ads

பாதுகாப்பு வளையத்தில் மெரினா.. காரணம் இதுதான்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த மாதம் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றன.

மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்காக ஒன்று கூடியது போல காவிரி பிரச்சினைக்காகவும் இளைஞர்கள் போராட்டம் நடத்தப்போவதாக தகவல் பரவியது. இதனால் கடற்கரை முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் அண்ணா சாலையில் நடந்த ஐ.பி.எல். எதிர்ப்பு போராட்டம் வன்முறை களமாக மாறியது. இதுபோன்ற காரணங்களால் மெரினா சர்வீஸ் சாலையில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டிருந்தது. பின்னர் அது விலக்கி கொள்ளப்பட்டது.

இருப்பினும் மெரினா கடற்கரை பகுதி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நேப்பியார் பாலத்தில் தொடங்கி கலங்கரை விளக்கம் வரையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற விவேகானந்தர் இல்லம் எதிரில் உள்ள சர்வீஸ் சாலை நிரந்தரமாக மூடியே வைக்கப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடந்தது. முன்னதாக இந்த போராட்டம் மெரினாவில் தடையை மீறி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக மெரினாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. வழக்கத்தை விட கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது மெரினா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கருப்பு சட்டை அணிந்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர். அவர்களது செல்போன்களும் ஆய்வு செய்யப்பட்டன.

காவிரி போராட்ட பீதி காரணமாக மெரினா கடற்கரையில் தினமும் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எம்.ஜி.ஆர். சமாதி பின்புறம் உள்ள கல்குட்டை பகுதியில் உதவி கமி‌ஷனர் ஒருவர் தலைமையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர கடற்கரை மணல் பகுதியில் ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சர்வீஸ் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்படாத நிலையில் அங்கு சந்தேக நபர்கள் நடமாடுகிறார்களா என்பது பற்றி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.