Header Ads

அஜீத் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வாலிபர் வெட்டிக்கொலை..

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 22). தீவிர அஜித் ரசிகர். தி.மு.க.விலும் உறுப்பினராக இருந்த அவர் சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அதே பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (37). தி.மு.க. வார்டு செயலாளர். மாட்டிறைச்சி விற்கும் கடை வைத்துள்ளார். இந்த கடையில் அரவிந்தன் வேலை செய்து வந்தார்.

அரவிந்தனும், சதீஷ்குமாரும் அஜித் ரசிகர்கள் ஒரே மன்றத்தில் பதவியில் உள்ளனர். ஆனால் கட்சி தொடர்பாக அவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் அரவிந்தன், நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை மாட்டிறைச்சி கடையின் அருகே தனது நண்பர்களுடன் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்.

அப்போது அரவிந்தனுக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் மாட்டிறைச்சியை வெட்டும் கத்தியை எடுத்து, அரவிந்தன் மார்பில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அரவிந்தனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

சாலைமறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.

அரவிந்தன் உயிரிழந்த சம்பவம் அறிந்ததும், அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சேலம் கூட்ரோட்டில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 கார்கள் மீது கற்கள் வீசி கண்ணாடிகளை உடைத்தனர்.

மற்றொரு பிரிவாக பிரிந்து சென்ற அரவிந்தனின் ஆதரவாளர்கள், சதீஷ்குமாரின் மாட்டிறைச்சி கொட்டகைக்கு தீ வைத்து கொளுத்தினர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

மேலும், சதீஷ்குமாரின் அண்ணன் தி.மு.க. நகர துணை செயலாளர் அன்பு வீட்டிற்கு சென்று கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

தொடர்ந்து பதற்றம் அதிகரித்ததால் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜேசுதாஸ், நகர இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் அண்ணாநகர் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். தாசில்தார் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் அரவிந்தன் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

திருப்பத்தூர் பகுதியில் அதிரடிப்படை போலீசாரும் அதிகஅளவில் குவிக்கப்பட்டுள்ளனர். எனினும் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. தலைமறைவாக உள்ள சதீஷ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.