Header Ads

சிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..

ஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன.
ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனியா நோய் தாக்குதல் அதிகம் இருந்த நிலையில் இந்தியாவில் இந்த நோய் அதிகம் பரவாமல் இருந்து வந்தது.
ஆனால், 2005-ம் ஆண்டு வாக்கில் இந்தியாவிலும் இதன் தாக்குதல் ஆரம்பித்தது. 2006, 2007-ல் நாடு முழுவதும் பல லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டார்கள்.
இப்போதும் ஒவ்வொரு ஆண்டும் சீசன் காலத்தில் பல்லாயிரக்கணக்கானேர் பாதிக்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு மட்டுமே 85 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
சிக்குன்குனியா நோயை குணப்படுத்துவதற்கோ அல்லது நோய் வராமல் முன்கூட்டியே தடுப்பதற்கோ இதுவரை நேரடி மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உடல் வீரிய சக்திக்கான மருந்துகளை கொடுத்தே நோயை குணப்படுத்தி வருகிறார்கள்.
ஆனாலும், இந்த நோய்க்கு ஆளானவர்களின் அனைத்து மூட்டு பகுதியிலும் பாதிப்பு ஏற்பட்டு கடுமையான கஷ்டங்களை சந்திக்கிறார்கள். அதில் இருந்து மீள்வதற்கே 4 வருடங்களுக்கு மேல் ஆகி விடுகிறது.
நேரடி மருந்து கண்டுபிடிக்கப்படாததால் அதன் பாதிப்பை உடனடியாக தடுக்க முடியவில்லை.
இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கே ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் சிக்குன் குன்யாவை கட்டுப்படுத்தும் புதிய மூலக்கூறுகளை கண்டுபிடித்துள்ளனர்.
ஐ.ஐ.டி.யின் பயோ டெக்னாலஜி துறையை சேர்ந்த ஷைலி தாமோர் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் இது சம்பந்தமாக ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், என்எஸ்பி-2 புரோட்டீஸ் என்ற என்சைமில் இருந்து பெப்-1, பெப்-2 ஆகிய மூலக்கூறுகளை எடுத்து அதன் மூலம் சிக்குன்குனியா வைரஸ்களை கொல்ல முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.
சிக்குன்குனியா வைரஸ்கள் உடலில் பரவியதும் ஒவ்வொரு செல்லிலும் ஊடுருவி பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கும். அவற்றை இந்த மூலக்கூறுகள் கொன்று விடுகின்றன.
அவர்கள் நடத்தி ஆய்வில் 99 சதவீத சிக்குன்குனியா வைரஸ்கள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் மருந்துகளை உருவாக்கி சிக்குன்குனியாவை உடனடியாக குணப்படுத்தி விடலாம் என்று ஆராய்ச்சி குழு தலைவர் ஷைலி தாமோர் தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள ஆய்வு கட்டுரை பயோ கெமிஸ்டிரி சர்வதேச பத்திரிகையில் வெளிவந்துள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.