விரிவான செய்திகள்

 

கொல்லப்பட்டது யார் என்று எமக்குத் தெரியாது !

14 March, 2012 by admin

கடந்த 3 தினங்களாக சனல் 4 வெளியிட்டுள்ள புது வீடியோ ஆதாரங்கள் உலகளாவியரீதியில் பல அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. இந்தியப் பாராளுமன்றம் முதல் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் வரை இந்த அதிர்வலைகள் சென்றுள்ளது. நேற்றைய தினம்(13) அமெரிக்க ராஜாங்கச் செயலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் இது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. தேசிய தலைவரின் கடைசி மகனும், 12 வயதுச் சிறுவனுமான பாலச்சந்திரணை இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது தொடர்பாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளரிடம் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது !

சனல் 4 தொலைக்காட்சியில் காட்டப்பட்ட சிறுவன், தலைவர் பிரபாகரன் மகனா என்பதனை தாம்மால் உறுதிசெய்ய முடியவில்லை என அமெரிக்க ராஜாங்கச் செயலகப் பேச்சாளர் விக்டோரியா நுலான்ட் தெரிவித்துள்ளார். இருப்பினும் இலங்கையில் நடைபெற்றுள மனித உரிமை மீறல்கள், மற்றும் தற்போது இலங்கையில் காணப்படும் நிலை தொடர்பாக அமெரிக்கா ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். குறிப்பாக சிரியா பலஸ்தீன் நாடுகளின் பிரச்சனை தொடர்பாக விளக்க இக் கூட்டம் கூட்டப்பட்ட போதும், இலங்கை குறித்தும் இதில் கேள்விகள் எழுப்பப்பட்ட விடையமானது, அமெரிக்காவில் இந்தக் காணொளி எவ்வகையான தாக்கத்தை உருவாக்கியுள்ளது எனக் காணக்கூடியதாக உள்ளது.

அமெரிக்க அரசானது, விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாக இன்னமும் பட்டியலிட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடையமாகும். இதன் காரணமாகவே அவர்கள் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் கொலை தொடர்பாக எதனையும் கூறவிரும்பவில்லை எனச் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதேவேளை சில தமிழ் தேசிய எதிர்ச் சக்திகள், சனல் 4 தொலைக்காட்சியைப் பயன்படுத்தி, தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக தெரிவிக்கும் தமது நோக்கத்தை நிறைவேற்றியுள்ளனர். இன்று வெளியாகும் ஆவணப்படத்தில் இது குறித்த செய்திகள் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


|    செய்தியை வாசித்தோர்: 194720

DMCA.com