07 February, 2010 by admin
யாழ். நகரில் இருந்து காங்கேசன்துறை வரையான பிரதான கே.கே.எஸ். வீதி விஸ்தரிப்பு நடவடிக்கையால் அப்பகுதியிலுள்ள 27 இந்துக் கோயில்கள் அழிக்கப்படும் நிலை உள்ளதாக இந்து மாமன்றம் தெரிவித்திருந்தது. எனவே இது தொடர்பாக சகல தரப்புகளுடனும் கலந்துரையாடிய பின்னரே தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி கூறியுள்ளாராம். யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அவர், தமது அலுவலகத்தில் நடத்திய கூட்டத்திலேயே இவ்வாறு கூறியுள்ளதாகத் தெரிகிறது.
இக்கூட்டத்தில் இந்து மாமன்றத்தின் சார்பில் அதன் உபதலைவர் ஆறுதிருமுருகன், முருகன், மன்றத்தின் யாழ். பிராந்திய பணிமனை நிர்வாக அலுவலர் வி.ஜெயசிங்கம், யாழ்.பல்கலைக்கழகத்தின் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் நா. சண்முகலிங்கன், விரிவுரையாளர் பொ. அகிலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினரையும், வேலை ஒப்பந்தகாரரையும் கல்லூரி அதிபர்களையும் ஆலய நிர்வாகிகளையும் அழைத்து எதிர்வரும் 10 ஆம் திகதி கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு தாம் முடிவு செய்துள்ளதாகவும் அந்தக் கூட்டத்தில் ஆராய்ந்து தீர்க்கமான முடிவு ஒன்று எட்டப்படும் என்று சந்திரசிறி உறுதியளித்துள்ளார்.