விரிவான செய்திகள்

 

புலிகளை சுட்டுக்கொல்ல தயாராகும் இராணுவம்: காணொளி இணைப்பு !

10 June, 2012 by admin

கைகள் கட்டப்பட்ட நிலையில், பல விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் கைதுசெய்து வைத்திருக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இக் காணொளியானது எப்போது, எவ்விடத்தில் எடுக்கப்பட்டது என்பது போன்ற விபரங்களை அறிய முடியவில்லை. இருப்பினும் யுத்த இறுதி நாட்களில் இவை கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளில் உள்ள ஆண்களையும் பெண்களையும் இராணுவத்தினர் பிடித்து ஓரிடத்தில் வைத்திருக்கும் காட்சியை, சக இராணுவச் சிப்பாய் ஒருவர் தனது கையடக்க தொலைபேசி கமரா மூலம் எடுத்துள்ளார். இவர்களில் காயப்பட்ட போராளிகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

கைகள் கட்டப்பட்ட நிலையில் இவர்கள் அனைவரையும் நிலத்தில் இராணுவத்தினர் அமர்த்திவைத்துள்ளனர். இவர்களுக்கு என்ன நடந்தது என்பது போன்ற விபரங்கள் அறியப்படவில்லை. இருப்பினும், இராணுவத்தினரின் உரையாடலைக் கேட்கும்போது, சில விடையங்கள் தெளிவாகின்றது. அதாவது குறிப்பாக ஒரு இராணுவச் சிப்பாய் இவர்கள் கருணாவின் ஆட்களா எனக் கேள்வி எழுப்புகிறார் ! இதற்கு பதிலளிக்கும் மற்றைய இராணுவச் சிப்பாய் இல்லை இல்லை இவர்கள் உண்மையான விடுதலைப் புலிகள் என்று சிங்களத்தில் கூறுகிறார்.

சரணடைந்த இல்லையேல் இராணுவத்தால் பிடிக்கப்பட்ட இப் போராளிகளில், எவராவது கருணாவின் ஆட்கள் இருக்கிறார்களா எனச் சோதனை இட்ட பின்னர், இவர்களை இராணுவம் என்ன செய்தது என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியாகும். கைகள் கட்டப்பட்டு இருக்கும் நிலையைப் பார்க்கும்போது, இவர்களில் பெரும்பான்மையானவர்களை இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றிருக்கலாம் என்ற அச்சமே எழுகிறது. கயிறால் அல்லது விலங்குகளால் இவர்களின் கைகள் கட்டப்படவில்லை. மாறாக பிளாஸ்டிக் பிணைப்புகளால் இவர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளதை காணொளியில் காண முடிகிறது என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.


|    செய்தியை வாசித்தோர்: 57190

DMCA.com