விரிவான செய்திகள்

 

இலங்கை கடலில் மிதக்கும் ஆயுதத் தளம் :

28 September, 2012 by admin

இலங்கை கடற்பரப்பில் மிதக்கும் ஆயுதக் களஞ்சியத் தளம், ஒன்றை நிர்மாணிக்க நிஷங்க என்னும் முன்நாள் இராணுவ அதிகாரி ஒருவர் அனுமதிகோரியுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. இதனை விட, மிகவும் அதிர்சியான தகவல் ஒன்றும் உள்ளது. இலங்கையில் உள்ள காலி முகத்திடலில் சுமார் 35 தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் தற்சமயம் செயல்பட்டு வருகிறது. இவை அனைத்துமே வெளிநாட்டு நிறுவனங்கள் ஆகும். ஒவ்வொரு நாளும் இலங்கை கடற்பரப்பை அண்மித்து சுமார் 1000 த்துக்கும் மேற்பட்ட சர்வதேச சரக்கு கப்பல்கள் பயணிக்கின்றன. இவற்றில் பல சோமாலிய கடற்கொளையினரால், சிறைப்பிடிக்கப்படுவது வழக்கம். இதனையே ஒரு வணிகமாக்கி, இப் பிராந்தியத்தினூடாகச் செல்லும் கப்பல்களுக்கு, நாம் பாதுகாப்பு தருகிறோம் என்றுசொல்லி பல கம்பெனிகள் இலங்கை சென்று கூடாரம் அடித்துள்ளார்கள்.

இந்த தனியார் கம்பெனிகளிடம், அதி சக்திவாய்ந்த விசைப்படகுகள், சுடுகலங்கள், மற்றும் படு பயங்கரமான ஆயுதங்களும் உள்ளன. இவர்கள் பாவிக்கும் ஆயுதங்களுக்கான தோட்டாக்களையும், எரிபொருட்களையும் இலங்கை பாதுகாப்பு அமைச்சே வழங்கிவருகிறது என்பது பலருக்குத் தெரியாது. இதனூடாக இலங்கை அரசு சுமார் 12 மில்லியன் அமெரிக்க டாலர்களை இதுவரை லாபமாக ஈட்டியுள்ளது என்கிறார்கள். இந்த ஆயுத மற்றும் எரிபொருள் விற்பனையை, கோத்தபாயவே தனது பாதுகாப்பு அமைச்சு ஊடாகச் செய்துவருகிறார். இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற உயரதிகாரியான நிஷங்க என்பவர், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உள்ளூர் பாதுகாப்பு கம்பெனி ஒன்றை நடத்திவருகிறார். இதனூடாக அவர் உள்ளூரில் உள்ள சில நிறுவனங்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பை வழங்கிவருகிறார்.

தற்சமயம் இவருக்கும் கோத்தபாயவுக்கும் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக, நிஷங்க ஒரு புது ஐடியாவை அவிழ்த்துவிட்டுள்ளார். அதாவது இலங்கைக் கடற்பரப்புக்கு அப்பால் ஒரு மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தையும், பாதுகாப்பு நிலையம் ஒன்றையையும் அமைத்து, அப் பிராந்தியத்தில் செல்லும் கப்பல்களுக்கு தாமே பாதுகாப்பு கொடுத்தால் என்ன என்பது தான் இவர் ஐடியா. இதனூடாக பல சர்வதேச கப்பல் கம்பெனிகளிடம் இருந்து பாதுகாப்பு என்று கூறி, கோத்தபாய பல மில்லியன் டாலர்களை வசூலிக்கலாம் என்பது திட்டம். அத்தோடு இலங்கையில் தற்போது கூடாரமிட்டுள்ள சர்வதேச தனியார் பாதுகாப்பு கம்பெனிகளை நாட்டை விட்டு விரட்டி விட்டால், மொத்த வியாபாரியாக ஆகிவிடலாம் அல்லவா ! இத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற பாதுகாப்பு அமைச்சு முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச் செய்தியானது சர்வதேச தனியார் பாதுகாப்பு கம்பெனி ஒன்றில் வேலைசெய்யும் ஒரு நபரால் அதிர்வுக்கு கசிந்துள்ளது.

வெகுவிரைவில் இந்தியப் பெருங்கடலில் இலங்கை ஒரு மிதக்கும் பாதுகாப்பு மத்திய நிலையம் ஒன்றை நிறுவவுள்ளது. இதற்கு சீனாவிடம் உதவிபெறுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்திய வல்லரசுக்கு இது மேலும் ஒரு தலையிடியைக் கொடுக்கும் செயலாக அமைந்துள்ளது என ஆராட்சியாளர்கள் கருத்துத் தெரிவித்துளனர். சிறிய கொசுவாக இருந்தாலும் இதன் இம்சை தாங்க முடியவில்லை என்று இந்தியா தலையில் கைவைக்கும் அளவு நிலை கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டு இருக்கிறது. எப்போது புலிகள் யுத்தரீதியாக வெல்லப்பட்டார்களோ அன்று தொடங்கிய தலையிடி இன்னும் குறைந்தபாடாக இல்லை !


|    செய்தியை வாசித்தோர்: 71048

DMCA.com