விரிவான செய்திகள்

 

பாலியல் ரீதியாக துன்புறுத்தி பின்னர் மனநோயாளி என்று அனுமதித்துள்ளார்கள் !

13 December, 2012 by admin

பலவந்தமாக இராணுவத்தில் இணைக்கப்பட்ட 100 பெண்களில் 21 பெண்களுக்கு என்ன நடந்தது ? 30 பெண்களை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தோம் என்று இராணுவம் கூறியது பொய் ! அப்படி என்றால் 9 பெண்களுக்கு என்ன நடந்தது ? பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் தந்தை... அதிர்வு இணையத்துக்கு வழங்கிய இரகசியத் தகவல் ! இந்தப் பெண்கள் கற்பழிக்கப்பட்டிருக்கலாம் !

இராணுவத்தினர் தமிழ் பெண்கள் 100 பேரை தாம் தமது படையணியில் இணைத்திருப்பதாக திடீர் என்று அறிவித்த விடையம் யாவரும் அறிந்ததே. இதற்கு முன்னதாகவே காதும் காதும் வைத்ததுபோல, வன்னியில் மிகவும் வறிய நிலையில் உள்ள, குடும்பங்களை கருணாவின் சகாக்கள் அணுகி இராணுவத்தில் பெண்களை சேர்த்துக்கொள்ள உள்ளார்கள் என்றும், அப்படி உங்கள் பெண் பிள்ளைகள் சேர்ந்தால் மாதம், 35,000 ரூபாவரை கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதில் சிலர் குடும்ப கஷ்டம் காரணமாகவே தமது பிள்ளைகள் இணைய சம்மதித்துள்ளார்கள். மேலும் பலர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிய நிலையில், வேறு வழியில்லாமல் தமது பெண் பிள்ளைகள் இராணுவத்தில் சேர சம்மதித்துள்ளார்கள். இந் நிலையில், இராணுவத்தில் இணைந்து சில நாட்களிலேயே சில தமிழ் பெண்கள், அங்கிருந்து விலகி வீடு சென்றுவிட்டனர். பின்னர் பயிற்ச்சி அளிப்பதாகக் கூறி இராணுவத்தினர் சுமார் 100 பெண்களை கிருஷ்ண புரம் பயிற்ச்சி நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.( முன்னர் புலிகளின் நவம் அறிவுக்கூடம்: இருந்த இடத்திற்கு)

சில தினங்களுக்கு முன்னர், கிருஷ்ண புரம் பயிற்ச்சி நிலையத்தில் தாதி வேலை பார்க்கும், மற்றும் மாலையில் வீடு திரும்பும் தமிழ் பெண் ஒருவரிடம் இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண் ஒருவர் தகவல் ஒன்றைச் சொல்லி அனுப்பியுள்ளார். அதாவது ....எனது வீட்டிற்குச் சென்று அப்பா- அம்மாவப் பார்த்து, அவர்களை இங்கே ஒருதடவை என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள். நாங்கள் நல்ல நிலையில் இல்லை, என்று கூறியுள்ளார். மாலை வேலையை முடித்த தாதி, இச் செய்தியை குறிப்பிட்ட பெண்ணின் அப்பா மற்றும் அம்மாவிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்தே, இவர்கள் தமக்குத் தெரிந்த மற்றைய பெண் பிள்ளைகளின் பெற்றோர் சிலரை அணுகி நாம் எல்லோரும் சென்று எமது பிள்ளைகளை ஒருமுறை பார்த்துவிட்டு வரலாம் என்று ஆலோசித்துள்ளார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர்கள் கிருஷ்ண புரம் சென்றவேளை, வழமைக்கு மாறாக ஆத்திரமடைந்த படையினர், அவர்கள் தம் பிள்ளைகளைப் பார்க்க முடியாது என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் பெற்றோர்கள் பெரும் சந்தேகங்களோடு வீடு திரும்பினர்.

இது இவ்வாறிருக்க, தற்போது 30 பெண்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகவே தாம் அவர்களை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் இராணுவத்தினர் திடீரெனத் தெரிவித்துள்ளார்கள். ஆனால் வைத்தியசாலை வட்டாரங்களின் செய்தியின்படி, 21 பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். உண்மையில் சில பெண்கள் வைத்தியசாலையில் இருந்து காணமல் போயுள்ளார்கள் என்பதே உண்மையாகும். இவர்கள், கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வீட்டிற்க்குச் சென்றிருக்கலாம் என எண்ணிய இராணுவத்தினர், உடனே 30 தொடக்கம் 40 வரையிலான இராணுவத்தினரை வார்டுக்கு வெளியே காவலுக்கு நிறுத்தியுள்ளனர், என அதிர்வு இணையம் அறிகிறது. இவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையின், மனநோயாளர் பிரிவிற்கு முன்னதாகவும், சிலவேளை , முன் வாசலிலும் காவலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் இந்த 21 பெண்களின் பெற்றோரையும் அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக நாடாளுமன்ற் உறுப்பினர் திரு.ஸ்ரீதரன் அவர்கள், நேரில் சென்று பார்வையிட முற்பட்டுள்ளார். அவரையும் இலங்கை இராணுவம் தடுத்துவிட்டது. குறிப்பிட்ட பெண்களை பாலியல் ரீதியாக இலங்கை இராணுவம் சித்திரவதை செய்துள்ளதாக நம்பப்படுகிறது.

இலங்கை இராணுவம் குறிப்பிடுவதுபோல இவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகவில்லை என்றும், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு பின்னர் அவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லி வைத்தியசாலையில் இவர்களை அனுமதித்துள்ளது இராணுவம் என்றும் சொல்லப்படுகிறது. இராணுவம் மேல் குற்றம் எதுவும் இல்லை என்றால், ஏன் இவர்களை பெற்றோர் பார்வையிடுவதை தடுக்கவேண்டும் ? என்ற கேள்விகளும் எழுகின்றது அல்லவா ? மனநோயாளிகள் என்று மருத்துவர் சான்றிதழ் கொடுத்துவிட்டால், தன்னை ஒரு இராணுவம் கற்பழித்தார் என்று நீதிமன்றில் சொன்னால் கூட செல்லுபடியாகாதே ! இதுபோன்ற மிகவும் கேவலமான யுக்திகளை இலங்கை இராணுவம் கையாள்கிறதா ? என்றும் அஞ்சப்படுகிறது. வேலை முடித்து வீடு செல்லும் மருத்துவர்கள் கூட இப் பெண்களின் நிலை குறித்து எதுவும் பேசக்கூடாது என்று அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள். இதுபோக சிங்கள மருத்துவர்கள் பலர் இருப்பதால், அவர்கள் இலங்கை இராணுவத்தின் சொற்படி தான் நடக்கிறார்கள் என்று, பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் தந்தையார் அதிர்வுக்கு தெரிவித்தார். அவரது சொந்தப் பாதுகாப்பு, மற்றும் அப் பெண்ணின் பாதுகாப்புக் கருதி அவரது பெயரை நாம் இங்கே வெளியிடவில்லை !


|    செய்தியை வாசித்தோர்: 125026

DMCA.com