விரிவான செய்திகள்

 

தமிழீழ எல்லாளன் படை என்னும் பெயரில் இயங்கும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் !

01 January, 2013 by admin

சமீபகாலமாக தமிழீழ எல்லாளன் படை என்னும் பெயரில் பல அறிவித்தல்கள், மின்னஞலூடாக வந்த வண்ணம் உள்ளது. தாம் ஈழத்தில் இருந்து இயங்கும் அமைப்பு என்றும், காடுகளில் தாம் வாழ்ந்து வருவதாகவும் இக் குழு தெரிவிக்கிறது. மட்டக்களப்பில், குடும்பத் தகராறு காரணமாக, போன வருடம் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலைசெய்யப்பட்டார். ஆனால் இந்த எல்லாளன் படையோ தாமே அவரைக் கொன்றதாகவும், அவர் சமூகச் சீரழிவு வேலைகளில் ஈடுபட்டதாகவும் மின்னஞ்சல் பிரசுரம் விட்டது. இதனை உண்மை என்று நம்பி சில இணையங்களும் இச் செய்தியை வெளியிட்டது. ஆனால் சில மாதங்களின் பின் அந் நபர் ஏன் கொல்லப்பட்டார், சொத்து விவகாரங்கள் என்ன ? என்பது தொடர்பான செய்திகள் வெளியானது. இவ்வாறு பல புரளிகளை கிளப்பி வரும் இந்த எல்லாளன் படை எமக்கு அனுப்பிய மின்னஞ்சலை ஊடறுத்து, அதன் ஐ.பி இலக்கத்தை நோக்கும்போது, அது கொழும்பில் இருந்து அனுப்பப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த குறிப்பிட்ட ஐ.பி இலக்கத்தில் இருந்தே எல்லாளன் படையின் மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகிறது. இதேவேளை இறுதியாக இவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையை சில தமிழ் இணையத்தளங்கள் பிரசுரித்துள்ளது. இவ்வறிக்கையில் சுமார் 5 தேசிய செயல்பாட்டாளர்களை மெளனமாக இருக்குமாறும், இல்லை என்றால் தண்டிக்கப்படுவார்கள் என்றும் எல்லாளன் படை தெரிவித்துள்ளது. (அதாவது தண்டிப்பது என்றால் அவர்கள் பாணியில் அது கொலை மிரட்டல் ஆகும்) இலங்கை அரசுக்கு எதிராக கடும் நடவடிக்கையில் ஈடுபடும் இந்த 5 பேரில், சிலர் ஜெனிவா சென்று மனித உரிமைக் கவுன்சில் கூட்டங்களில் கலந்துகொண்டவர்களும் உள்ளனர். 2013 மார்ச் மாதம் ஜெனீவாவில் , இலங்கை அரசுக்கு எதிராக வர இருக்கும் தீர்மானங்களுக்கு வலுச்சேர்க்க இந்த தேசிய செயற்பாட்டாளர்கள் தற்போது முற்பட்டுள்ளார்கள். ஆனால் எல்லாளன் படை கூறுகிறது இவர்கள் மெளனமாக இருக்கவேண்டும் என்றும் , இல்லை என்றால் தண்டிப்போம் என்று கொலை அச்சுறுத்தல் விடுக்கிறது.

அப்படி என்றால் உண்மையிலேயே இந்த எல்லாளன் படை என்பது யார் ? இதனை யார் கொழும்பில் வைத்து இயக்குகிறார்கள் ? இலங்கை அரசுக்கு நெருக்கடிகளைக் கொடுக்கும் , அதுவும் குறிப்பிடத்தக்க மிக முக்கியமான 5 பேருக்கு இந்த எல்லாளன் படை ஏன் அச்சுறுத்தல் விடவேண்டும் ? எனவே இலங்கை அரசின் புலனாய்வுப் பிரிவினர் எல்லாளன் படை என்ற பெயரில் இயங்குகிறார்கள் என்பது தற்போது நிரூபனமாகியுள்ளது. முன்னர் தளபதி ராம் காட்டில் இருக்கிறார், நகுலன் காட்டில் இருக்கிறார், என்று கூறி இலங்கை புலனாய்வினர் வெளிநாட்டில் உள்ள தமிழர்களை ஏமாற்றி பணம் பறித்ததும் மக்களுக்கு நினைவிருக்கலாம். எனவே , இலங்கை அரசின் இந்த சதித் திட்டங்களுக்குள் நாம் விழ்ந்துவிடாமல் இருப்பது நல்லது. வரும் மார்ச் மாதத்திற்கு முன்னதாக தேசிய செயல்பாட்டாளர்களை மெளனிக்க இலங்கை புலனாய்வு தீவிர கவனம் செலுத்திவருகிறது என்றும் மேலும் அறியப்படுகிறது.


|    செய்தியை வாசித்தோர்: 33332

DMCA.com