விரிவான செய்திகள்

 

இலங்கை வாலிபர் கடாபி, தமிழக போலீஸ் திறமைக்கு சவால் விட்டு எஸ்கேப் !

02 January, 2013 by admin

தமிழகத்தில் இலங்கை தமிழர் அகதி முகாமை சேர்ந்த ஒருவர், கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸ்காரர்கள் வேறு சோலியில் மூழ்கியிருந்தபோது தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் பரமத்தி, இலங்கை தமிழர் அகதி முகாமை சேர்ந்தவர் கடாபி என்று அழைக்கப்படும் ராஜூ, என்பவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போலீஸ் அவரை வலைவீசி தேடிக்கொண்டு இருந்தது. இந்நிலையில், முகாமில் உள்ள வீட்டுக்கு ராஜூ வந்திருப்பதாக பரமத்தி பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

விரைந்து சென்று, அவரை கைது செய்து, பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் பரமத்தி பொலிஸார். கைது செய்யப்பட்ட ராஜூவை, பொலிஸ் நிலையத்தில் உட்கார வைத்துவிட்டு, ஏனைய வழக்குகள் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். அந்த அலுவல்கள் எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு திரும்பிப் பார்த்தால், ராஜூ எஸ்கேப் ! “அவர் எப்போது கிளம்பிச் சென்றார் என்றுகூட தெரியவில்லை. எங்கே போகிறார் என்றுகூட சொல்லிவிட்டு போகவில்லை” என்ற கவலையில் வாடுகிறார்கள், பரமத்தி பொலிஸார்.

சொல்லாமல் போனவரை பரமத்தி பொலிஸாரே பிடிப்பார்களா, அல்லது சிறப்பு தனிப்படை அமைத்து வலை வீசுவார்களா என இனிமேல்தான் முடிவு எடுக்கப்படவுள்ளது.


|    செய்தியை வாசித்தோர்: 33193

DMCA.com