விரிவான செய்திகள்

 

எய்ட்ஸ் என்ற வார்த்தையால் தப்பித்தது பெண்ணின் கற்பு !

10 January, 2013 by admin

திருப்பதி வன பகுதியில் தனியே நின்றிருந்த காதல் ஜோடியை சரமாரியாக தாக்கிய கும்பல், இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதுர்யமாக செயல்பட்ட பெண் தனக்கு எய்ட்ஸ் இருப்பதாக கூறி அவர்களிடம் இருந்து தப்பினார். சித்தூர் மாவட்டம் பீலேர் மண்டலம் நுன்லேவான்லபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜாரெட்டி (30). இவரும் அதே பகுதியை சேர்ந்த 25 வயது பெண்ணும் கடந்த ஓராண்டாக காதலித்து வருகின்றனர். நேற்று ராஜாரெட்டி, தனது காதலியுடன் பைக்கில் திருப்பதி சென்றுவிட்டு, இரவு பாகராபேட்டை வனப்பகுதி வழியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். இரவு 7.30 மணியளவில் பைக்கை சாலையோரம் நிறுத்திவிட்டு இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு 2 பைக்குகளில் 4 ஆசாமிகள் வந்தனர். அவர்கள் காதல் ஜோடியை பார்த்ததும் பைக்கை நிறுத்தினர். காதலர்களை நெருங்கி வந்த அவர்கள் திடீரென ராஜாரெட்டியை சரமாரி அடித்து உதைத்தனர். பின்னர் இளம்பெண்ணை மறைவான இடத்துக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த இளம்பெண் உஷாரானார். ‘என்னை விட்டுவிடுங்கள். எனக்கு எய்ட்ஸ் நோய் இருக்கிறது’ என்று அழுதார். ஏமாற்றமடைந்த ஆசாமிகள் அந்த பெண்ணையும் சரமாரியாக அடித்தனர். பின்னர், இருவரையும் கட்டிப் போட்டுவிட்டு பெண்ணின் கம்மல், செயின் உள்பட 3 சவரன் நகைகளையும், ராஜாரெட்டி பாக்கெட்டில் இருந்து ரூ.10 ஆயிரம் பணத்தையும் பறித்துக்கொண்டு தப்பினர்.

இவர்களது அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வந்து, காதல் ஜோடியை காப்பாற்றி சந்திரகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து சந்திரகிரி போலீசில் ராஜாரெட்டி நேற்று இரவு புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகபூஷணம், சப்இன்ஸ்பெக்டர் வித்யாசாகர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்கில் வந்த 4 ஆசாமிகளையும் தேடிவருகின்றனர். டெல்லியில் இரவு நேரத்தில் காதலனுடன் சென்ற மருத்துவ மாணவியை பஸ்சில் ஏற்றிய கும்பல் அவரை பலாத்காரம் செய்தது. சிகிச்சை பலனின்றி மாணவி பலியானார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், திருப்பதி காட்டில் அதே போன்ற முயற்சி நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


|    செய்தியை வாசித்தோர்: 18667

DMCA.com