விரிவான செய்திகள்

 

ரிசானாவை அடுத்து கட்டாரில் மேலும் ஒரு இலங்கையருக்கு மரண தண்டனை !

14 January, 2013 by admin

கட்டார் நாட்டில் பணியாற்றும் இலங்கை இளைஞர் ஒருவருக்கு, அந்த நாட்டு நீதிமன்றம், கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி மரண தண்டனை விதித்துள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. இந்த இளைஞர் கடந்த 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கட்டார் சென்றுள்ளார். வெங்கடாசலம் சுதேஷ்கர் என்ற 22 வயதான இளைஞரே இவ்வாறு மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். கட்டாரில் பணியாற்றி, இந்தியாவை சேர்ந்த சாரதி ஒருவருடன், குறித்த இளைஞர் பணியாற்றிய சிறப்பங்காடி ஒன்றில், ஏற்பட்ட மோதலின் போது, கத்தி குத்துக்கு இலக்காகி இந்திய சாரதி கொல்லப்பட்டமை தொடர்பாக இலங்கை இளைஞர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த கொலை சம்பவம் 2011 ஆம் ஆண்டு 6 மாதம் 02 திகதி நடத்துள்ளது. சுமார் ஒன்றரை வருடங்கள் வழக்கை விசாரித்த கட்டார் நீதிமன்றம், இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. கொல்லப்பட்ட இந்திய சாரதியின் மாமனார் ஒருவர் மற்றும் கட்டாரில் உள்ள சகோதரர் ஒருவருடன் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இளைஞரின் உறவினர் ஒருவர் உத்தியோகபூர்வமாக நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னர், கொலை தொடர்பில் சமாதானத்திற்கு வருவதற்கு 70 லட்சம் ரூபா இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரப்பட்டது. இதன் பின்னர், இலங்கை தூதரகத்தின் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, இந்த தொகையானது 35 லட்சமாக குறைக்கப்பட்டது.

எனினும் பணத்தை திரட்டுவதற்கு இலங்கை இளைஞரின் பெற்றோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந் நிலையில் சுதேஷ்கருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 35 லட்சம் ரூபா பணத்தைக் கொடுக்கவில்லை என்றதும், நிலுவையில் இருந்த வழக்கை கொல்லப்பட்டவரின் உறவினர்கள் தொடர்ந்துள்ளார்கள் எனவும் மேலும் அறியப்படுகிறது.


|    செய்தியை வாசித்தோர்: 28675

DMCA.com