விரிவான செய்திகள்

 

கடைசி நேரக் கழுத்தறுப்பு -பாகம் - 1

18 January, 2013 by admin

2009ம் ஆண்டு கனேடிய மற்றும் அமெரிக்க அரசுகள் இணைந்து இலங்கையில் ஒரு பேர் நிறுத்தத்தை கொண்டுவர இருந்தது ! அவர்கள் விடுத்த கோரிக்கை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தெரிவிக்கப்பட்டது. அது புலிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்க மற்றும் கனடாவில் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டிருப்பதால், புலிகள் கொடுக்கும் வாக்குறுதியை தமிழ் தேசிய கூட்டமைப்பே, அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு கூறவேண்டும் என்று சொல்லப்பட்டது ஆனால் நடந்தது என்ன ? சம்பந்தர் ஆடிய நாடகங்கள் என்ன ? கடைசி நேரக் கழுத்தறுப்பு எவ்வாறு நடந்தது ? மக்கள் அறிந்திராத பல இரகசியங்கள் ! இதோ முதலாவது பாகம் !

திருக்குறளுக்கு பிறகு இத்தனை அதிக பொழிப்புரைகள்,விளக்கவுரைகள் கொடுக்கப்பட்டிருப்பது சம்பந்தனின் உரைக்குதான் என்று நினைக்கிறேன். சம்பந்தப்பட்ட சம்பந்தன் தேமே என்று தன்பாட்டில் அடுத்த குட்டிக்குத்துக்கரணத்துக்கு ரெடியாகிக்கொண்டே இருக்க, அவரின் அடிப்பொடிகள் வரிந்துவிழுந்துகொண்டு அவர் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, இந்த கோணத்தில் சொல்லிருக்கவில்லை என்று எழுதியும் சொல்லியும் வருகிறார்கள். சம்பந்தன் சிங்ககொடியை திடும் என கையில் எடுத்து ஆட்டிக் குதூகலிப்பதும்,வடக்கு-கிழக்கு, தமிழர்தாயகம் என்று நான் சொல்லமாட்டேன் என்று பிரகடனம் செய்வதும், வடக்கு-கிழக்கை விட்டு சிங்களராணுவம் வெளியேறவேண்டும் என தான் கோரப்போவதில்லை என்று உரை ஆற்றுவதும் எல்லாமே ராஜதந்திரத்தின் இன்னொரு வடிவமே என்று அடித்து சத்தியம் செய்யும், எழுத்துகளும் உலாவத்தான் செய்கின்றன.

பல்லாயிரம் தமிழ்மக்கள் படுகொலைசெய்யப்படுவதை தடுப்பதற்கான அனைத்துமுயற்சிகளிலும், உலகத்தமிழினம் திரண்டுநின்றவேளையில்,ஏதாவது ஒரு சிறுதுரும்புகூட இந்தநேரம் எமது இனத்துக்கு கிடைக்காதா..எமது இனம் ஆழ்கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கும்போதில் ஏதாவது ஒரு சிறு ஆறுதல்,சிறு போர்நிறுத்தம் ஏற்பட்டுவிடாதா,எமது மக்கள் காப்பாற்றப்பட மாட்டார்களா என்று ஏங்கிய பொழுதில்,

அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தும்.... அதனை சம்பந்தன் ...என்னவிதமாக.... நயசஞ்சகமாக நடந்துகொண்டார் என்பதை அறியும்போது இப்போது சம்பந்தன், ஆற்றும் உரைகள்,பேச்சுகள் எதுவுமே பெரிதாக அதிர்ச்சிஅளிப்பதாக இல்லை. உலகத்தின் உறங்கிய மனசாட்சியை புலம்பெயர்மக்களின் எழுச்சிமிகு ஒன்றுகூடல்கள், வீதிமறியல்கள்,சாகும்வரை உண்ணாவிரதங்கள், தீக்குளிப்புகள் என்பன தட்டி எழுப்பிக்கொண்டிருந்த பொழுது அது. மானுடவரலாற்றின் மிகப்பெரிய படுகொலைகள் அங்கு நடக்க இருப்பதை சில நாடுகள் புரிந்துகொண்டு எழுந்து உட்கார்ந்த வேளையும் அதுதான். தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் மனித உயிர்கள் சிதறடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கப்போகிறார்கள் என்பதை புரிந்துகொண்டன சில நாடுகள்.

அத்தகைய நாடுகளில் கனடாவும் ஒன்றாக இருந்தது. கனடாவில் தமிழர்கள் கணிசமான அளவில் வாழ்ந்துவந்ததும், தமிழ்மக்களமீதான படுகொலைகளை நிறுத்தும்படி கனடாவின் தெருக்களில்,பாராளுமன்றின்முன்னால் என்று தமிழ்மக்கள் தினமும் அதிகளவில் கூடிநின்றதும், கனடாவின் இந்த நிலைப்பாட்டுக்கான காரணங்களில் ஒன்றாக இருந்தது. 2009 பெப்ரவரி மாதத்தின் இறுதியில் கனடாவின் மிக முக்கியமான சட்டவாளர்கள்,புத்திஜீவிகள், பல்கலைகழகத்தினர் மற்றும் கட்சிமுக்கியமானவர்களட இணைந்து ஒரு திட்டத்தை வகுத்தனர். மிக அவசரமான இந்த திட்டத்தின் மிகமிக முக்கியமான முதல் வேலைத்திட்டம் என்ன என்றால் ஒரு போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவது என்பதே ஆகும்.

இந்த திட்டத்தின் வடிவம் கனடாவில் வசிக்கும் முன்னாள் தமிழர் விடுதலைக்கூட்டணியின் முக்கியஉறுப்பினரும் வழக்கறிஞருமாகிய ஒருவரிடம் விளக்கமாக கூறப்பட்டது. அவருக்கு ஊடாகவே இந்த போர்நிறுத்ததிட்டத்தின் விபரங்கள் விடுதலைப்புலிகளுக்கு தெரியப்படுத்துவது என்பதே நோக்கமாக இருந்தது.

அவருக்கு கூறப்பட்டது இதுதான்.

'தமிழீழவிடுதலைப் புலிகள் ஒரு போர்நிறுத்தத்துக்கு தாம் உடன்படுவதாக தெரிவிக்கவேண்டும்'

'தமிழீழவிடுதலைப்புலிகளின் மீதான பயங்கரவாதபட்டியல்,தடை என்பன சர்வதேச அளவில் இருந்ததால் இந்த போர்நிறுத்தத்துக்கு விடுதலைப்புலிகள் சம்மதம் தெரிவிப்பதை தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமையின் ஊடாக கனடாவுக்கு தெரியப்படுத்த வேண்டும்'

'அப்படி தெரியப்படுத்தி 72 மணித்தியாலங்களுக்குள் கனடா அமெரிக்காவுடன் இணைந்து சிங்களதேசத்தை ஒரு போர்நிறுத்தத்துக்கு கொண்டுவரும் ' என்பதே அவருக்கு கூறப்பட்டதன் சுருக்கமும் முக்கியமானதும் ஆகும்.

கனடாவில் இப்போதும் வசித்துவரும் அந்த தமிழர்விடுதலைக்கூட்டணி முக்கியஸ்தர் இந்த விடயத்தை உடனடியாக தமிழ்தேசியகூட்டமைப்பின் தலைமைக்கும் தமிழீழவிடுதலைப் புலிகளுடன், நேரடித்தொடர்புகளை பேணிவந்த ஒரு ததேகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரிடமும் தெரிவித்தார்.

21.01.2013 அடுத்த பாகம் தொடரும்

ச.ச.முத்து.


|    செய்தியை வாசித்தோர்: 56230

DMCA.com