விரிவான செய்திகள்

 

புது கதை : கடைசிவரை படிக்கவேண்டாம் !

05 February, 2013 by adminஅமெரிக்க விமானம் ‘பான்-ஆம்’ ஸ்காட்லாந்து மேலாக பறந்துகொண்டிருந்த போது, குண்டு வெடித்து வீழ்த்தப்பட்ட சதியின் பின்னணியில் இருந்தது லிபியா அல்ல, ஈரான்தான்” என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. 270 பேர் கொல்லப்பட்ட இந்த விபத்து, லிபியா உளவுத்துறையால் திட்டமிடப்பட்டு, நடத்தப்பட்டது என்பதே, 25 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பப்பட்டு வந்த கதை. தற்போது வெளியாகியுள்ள புதிய கதையை யாரும் நம்ப மாட்டார்கள், அது, நம்பகத்தன்மை வாய்ந்த ஒருவரது வாயில் இருந்து வராவிட்டால்! ஆனால், அப்படித்தான் வந்திருக்கிறது. புதிய கதையை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கிட்டத்தட்ட என்டோஸ் பண்ணியுள்ளது.

சரி. இந்த பான்-ஆம் விமான விபத்து, எப்படி நடந்தது? அதன் பின்னணி சதியில் இருந்தது ஈரான் என இப்போது எப்படி நம்புவது? பிரெஞ்ச் துப்பறியும் கதை எழுத்தாளர் Girard de Villiers கொடுத்த பேட்டி ஒன்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதில்தான் அவர் இந்த புதிய தகவலை கூறியுள்ளார். அவரை பேட்டி கண்டவர், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் பிரபல செய்தியாளர், Robert Worth. இவர், அந்தப் பத்திரிகையின் மத்திய கிழக்கு ஸ்பெஷலிஸ்ட். இவரது எழுத்துக்களுக்கு நிறையவே நம்பகத்தன்மை உண்டு. பிரெஞ்ச் எழுத்தாளரை பேட்டி கண்ட Robert Worth, அமெரிக்கா திரும்பியபின், சி.ஐ.ஏ.வில் உள்ள தமது தொடர்புகள் மூலம் விசாரித்தபோது, “1988-ம் ஆண்டு நடந்த இந்த விமான விபத்தின் பின்னணியில் இருந்தது ஈரான்தான் என்று சி.ஐ.ஏ.வுக்கு தெரியும். ஆனால், அது பற்றி வாய் திறக்கவில்லை. காரணம் சி.ஐ.ஏ.வுக்கும், மற்றொரு அமெரிக்க உளவுத்துறை எஃப்.பி.ரு.க்கும் இடையேயுள்ள முரண்பாடுகள்தான்” என்று எழுதியுள்ளார்.

இவர் இப்படி எழுதியைதை அடுத்தே, இந்த புதிய தியரியை பலரும் நம்பத் தொடங்கியுள்ளனர். ஒரு காலத்தில் அமெரிக்காவின் #1 விமான நிறுவனமாக இருந்த பான்-ஆம் (தற்போது இல்லை) ஏர்லைன்ஸின் விமானம் தட இலக்கம் 103, டிசம்பர் மாதம் 21-ம் தேதி, 1988-ம் ஆண்டு வழமைபோல ஆபரேஷனை தொடங்கியது. இது ஒரு போயிங் 747 - 121 ரக விமானம். ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் இருந்து லண்டனுக்கு வந்து, லண்டனில் இருந்து நியூயார்க் சென்று, டிட்ராயிட் செல்வதே வழமையான ரூட். இது கொஞ்சம் ட்ரிக்கியான ரூட். காரணம், இரண்டு தடவைகள் விமான டைப் மாற்றப்படும். ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் இருந்து லண்டனுக்கு போயிங் 727 விமானம். லண்டனில் இருந்து நியூயார்க்குக்கு போயிங் 747 விமானம். மீண்டும், நியூயார்க்கில் போயிங் 727 விமானமாக மாற்றப்பட்டு டிட்ராயிட் செல்லும். இதாவது, தொலைவு அதிகமுள்ள ட்ரான்ஸ் அட்லான்டிக் பறத்தலிலேயே, பெரிய விமானமான போயிங் 747 உபயோகிக்கப்படும்.

விமானம், பிராங்பர்ட்டில் இருந்து எந்த சிக்கலும் இன்றி லண்டனுக்கு வந்து சேர்ந்தது. லண்டனில், பயணிகள், மற்றும் அவர்களது சூட்கேஸ்கள் ஒரு விமானத்தில் இருந்து மற்றொரு விமானத்துக்கு மாற்றப்பட வேண்டும். பயணிகளை பொறுத்தவரை, அவர்களது போர்டிங் பாஸ் செக் பண்ணப்பட்டு ஏற்றப்படுவார்கள். ஆனால், சூட்கேஸ்கள்? அந்த நாட்களில், எதுவித செக்கிங்கும் இல்லாமல், ட்ரான்ஸ்ஃபர் பண்ணி விடுவார்கள். அன்றும் அப்படித்தான் நடந்தது. லண்டன் ஏர்போர்ட்டில், பிராங்பர்ட்டில் இருந்து போயிங் 727 - ல் வந்த சூட்கேஸ்கள் அனைத்தும் போயிங் 747 - ல் ஏற்றப்பட்டன. அந்த சூட்கேஸ்களின் உரிமையாளர்கள், விமானத்தில் உள்ளனரா என்று செக் பண்ணாமல்! அப்படி ஏற்றப்பட்ட சூட்கேஸ்களில் ஒன்றில், வெடிகுண்டு இருந்தது. (அந்த வெடிகுண்டை சுலபமாக பிராங்பர்ட்டில் தடுத்திருக்க கூடிய ஒரு சான்ஸை, ஜெர்மன் உளவுத்துறை மற்றும், எஃப்.பி.ஐ. கோட்டை விட்டது வேறு கதை) இந்த வெடிகுண்டு சூட்கேஸ், விமானத்துக்கு உள்ளே, மற்றைய சூட்கேஸ்களுடன் லோட் செய்யப்பட்டது.

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து 18:25 மணிக்கு விமானம் கிளம்பியது. கேப்டன் ஜேம்ஸ் ப்ரூஸ் மக்வாரி பிரதம பைலட்டாக இருந்தார். இந்த விமானத்தில், சில முக்கியமான நபர்களும் பயணம் செய்தனர்.
நமிபியா நாட்டுக்கான ஐ.நா. கமிஷனர் பர்ன்ட் கார்ள்சன், வாக்ஸ்வேகன் கார் நிறுவனத்தின் அமெரிக்க பிரிவின் தலைவர் ஜேம்ஸ் ஃபல்லர், பிரிட்டிஷ் இசையமைப்பாளர் பால் ஜெஃப்ரிஸ் ஆகியோர் பயணிகளாக இருந்தனர்.
இவர்களைவிட வேறு சிலரும், அவர்கள் யார் என்று வெளியே தெரியாமல் பயணித்தனர். ‘யார் என்று வெளியே தெரியாமல்’ என்று சொன்னதும் ஆட்கள் யார் என்பதை புரிந்திருப்பீர்களே… ஆம். உளவுத்துறைக்காரர்கள். லெபனான், பெய்டூட் நகரில் சி.ஐ.ஏ. உதவி தலைவராக பணிபுரிந்த மேத்யூ கனொன் இந்த விமானத்தில் 14J இலக்க சீட்டில் இருந்தார்.

அவருக்கு அடுத்த சீட்டில் இருந்தவர், சாக் மக்கீ. இவர் யாரென்றால், அமெரிக்காவின் ராணுவ உளவுத்துறைகளில் ஒன்றான Defense Intelligence Agency (DIA), பெய்ரூட் அதிகாரி. இவர்கள் இருவரும் பிசினெஸ் கிளாசில் இருக்க, அவர்களது பாடி கார்டுகள், எகானமி கிளாசில் பயணித்தனர். விமானம் லண்டனில் இருந்து புறப்பட்டு ஸ்காட்லாந்துக்கு மேலாக பறந்து கொண்டிருந்தபோது, வெடிகுண்டு வெடித்தது. குண்டு வெடித்த நேரத்தில் விமானம், 31,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. வேகம் 313 kn (580 km/h). விமானத்தில் இருந்த 243 பயணிகள், 16 சிப்பந்திகள் ஆகியோர் கொல்லப்பட்டனர். வானில் சிதறிய விமானம், தரையில் குடியிருப்பு பகுதியில் வந்து வீழ்ந்தது. தரையில் 11 பேர், கொல்லப்பட்டனர்.

இதுதான், அந்த விபத்து.

விசாரணை தொடங்கியபோது, வெறுமையாக தொடங்கி, லிபிய உளவுத்துறையின் திட்டமிடலில் செய்யப்பட்டது என்பதை கண்டுபிடித்தார்கள். இந்த விசாரணைகளில், அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. பெரிதாக ஈடுபடவில்லை. மற்றொரு உளவுத்துறை எஃப்.பி.ஐ.தான் பிரதானமாக ஈடுபட்டது. தற்போது, Girard de Villiers வெளியிட்டுள்ள தகவலின்படி, விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே, இது ஈரானின் வேலை என்பதை சி.ஐ.ஏ. தெரிந்து கொண்டது, ஆனால், அவர்களுக்கும், எஃப்.பி.ஐ.க்கும் இடையே இருந்த முரண்பாடுகளால், தமக்கு தெரிந்ததை மறைத்து விட்டார்கள் என்று கூறப்படுகிறது. லிபியா இந்த காரியத்தை ஏன் செய்தார்கள் என இவர்கள் நினைத்தார்கள் ?

1986 - ம் ஆண்டு, அமெரிக்கா, லிபியாமீது தாக்குதல் தொடுத்திருந்தது. லிபிய ஜனாதிபதி கடாபி, அதற்கு பழிக்கு பழி வாங்குவதற்காக அமெரிக்க விமானத்தை வீழ்த்துமாறு தமது உளவுத்துறைக்கு உத்தரவிட்டார் என்பதே, இன்று வரை உள்ள தியரி. சரி. இதை ஈரான் ஏன் செய்ய வேண்டும்? விஷயம் இருக்கிறது. பான்-ஆம் விமானம் குண்டு வெடித்து தகர்க்கப்பட்டதற்கு 5 மாதங்களுக்கு முன், மற்றொரு விபத்து நடந்தது. ஈரான் ஏர் விமானம் தடம் இலக்கம் 655 சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா. ஜூலை 3 - ம் தேதி, 1988 - ம் ஆண்டு, இந்த விமானம் பந்தார் அப்பாஸ் நகரில் இருந்து துபாய் நோக்கி சென்று கொண்டிருந்தபோது ஹோமுஸ் பகுதிக்கு மேல் பறந்துகொண்டிருந்த நிலையில், அமெரிக்க ஏவுகணை விமானத்தை நோக்கி ஏவப்பட்டது. ஏவுகணை விமானத்தை சிதறடித்தது. அதில் பயணம் செய்த 290 பேரும் கொல்லப்பட்டனர். இதில் பெரிய சோகம் என்னவென்றால், இந்த விமானம் ஆரான் வான் பகுதிக்கு வெளியே பறந்தது என்றே ஏவுகணை ஏவப்பட்டது. ஆனால், விமானம், ஈரான் வான் பகுதியிலேயே சரியாக பறந்து கொண்டிருந்தது.

இந்த விவகாரம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு போனது. அப்போது, அமெரிக்க தரப்பில் இருந்து வேறு ஒரு வாதம் முன்வைக்கப்பட்டது. விமானம், ஈரான் வான் பகுதியில் பறந்ததை ஒப்புக்கொண்ட அமெரிக்கா, அந்த விமானம் பயணிகள் விமானம் என்று தமக்கு தெரியாது என்றும், அது F - 14 Tomcat fighter போர் விமானம் என்று தாம் தவறுதலாக நினைத்து விட்டதாகவும், அமெரிக்கா கூறியது. இறுதியில் தீர்ப்பு வெளியானபோது, அமெரிக்கா இழப்பீடு வழங்கியது. ஒவ்வொரு பயணிக்கும் $213,103 வீதம், 61.8 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்கியது. ஆனால், இறுதிவரை தவறுக்கு பொறுப்பேற்கவும் இல்லை, மன்னிப்பு கோரவும் இல்லை. இதற்கு பழி வாங்கவே, ஈரான் பான்-ஆம் விமானத்தை வீழ்த்தியதாகவும், பழி லிபியா மீது விழுந்தபோது, ஈரானின் மதத் தலைவர் அயதுல்லா கொமேனி, லிபியா ஜனாதிபதி கடாஃபியிடம் பேசி, அதை ஏற்றுக்கொள்ள வைத்தார் என்றும் இப்போது சொல்கிறார்கள்.


|    செய்தியை வாசித்தோர்: 40377

DMCA.com