விரிவான செய்திகள்

 

ஐதராபாத் குண்டுவெடிப்புக்கு 1 கிலோ ..

23 February, 2013 by admin

ஹைதராபாத்: ஹைதராபாத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒரு கிலோ கிராம் அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டுள்ளது தடயவியல் அறிக்கையில் தெரிய வந்துள்ளது. தாமிரக் கம்பிகள் மற்றும் சிறு இரும்பு குண்டுகள் போன்றவையும், குண்டுகளை வெடிக்க வைக்க 3.9 வாட் சக்தி கொண்ட பேட்டரியும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹைதராபாத்தில் நேற்று முன் தினம் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் 16 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடைய இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள்தான் குண்டுகளை வைத்தனர் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 16 பேரைப் பலிகொண்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு, ஐஇடி(IED)எனப்படும் சக்தி வாய்ந்த நவீன வெடிகுண்டுகளை தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர்.

ஐந்து வெடிபொருட்களை பயன்படுத்தி, வீட்டிலேயே எளிய முறையில் இந்த வெடிகுண்டு தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. தென்ஹல்குடா மத்திய சிறையில் உள்ள முந்தைய குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளிடம் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இன்று மாலைக்குள் குண்டு வெடிப்பின் பின்னணி தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றவாளியிடம் விசாரணை

ஹைதராபாத் குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை என்றாலும் இந்த சதி திட்டத்தில் மிக முக்கிய பங்கு வகித்த ஒருவனை தேசிய புலனாய்வு பிரிவினர் பிடித்துள்ளனர். அவனை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். அவன் யார், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவன் என்பது உள்பட எந்த தகவலையும் வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.

குண்டு வெடிப்பில் காயம்

இதற்கிடையே 2007-ம் ஆண்டு குண்டு வெடிப்பில் சிக்கி கால் இழந்த அப்துல்வாகீத் என்பவன் மீண்டும் இந்த தடவையும் 2-வது தடவையாக குண்டு வெடிப்பில் சிக்கி காயம் அடைந்துள்ளான். அவன் மீதும் தனிப்படை போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. அவனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. போலீசார் பிடியில் உள்ள இந்த 2 பேர் மூலம் துப்பு துலங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமோனியம் நைட்ரேட் கலவை

தீவிரவாதிகளில் ஒருவன் அம்மோனியம் நைட்ரேட் கலவை கொண்ட வெடிகுண்டுகளை தயாரிப்பதில் மிகவும் நிபுணத்துவம் கொண்டவனாக இருப்பான் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அமோனியம் நைட்ரேட் கலவையில் வெடிகுண்டு தயாரிக்கும்போது சிறு தவறு நடந்தாலும் அது உடனே வெடித்து சிதறி விடும். எனவே குண்டுகளை தயாரிப்பதில் கை தேர்ந்தவனை தீவிரவாதிகள் ஐதராபாத்துக்கு அனுப்பி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மூன்று முறை ஒத்திகை

குண்டு வெடிப்பை நிகழ்த்த மேலும் 2 அல்லது 3 பேர் உதவிகள் செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். எனவே குண்டு வெடிப்பில் 5 அல்லது 6 பேருக்கே தொடர்பு இருப்பதாக கருதப்படுகிறது. இவர்கள் யாராக இருக்கும் என்று தேசிய புலனாய்வு பிரிவினர் அடையாளம் காணத்தொடங்கி உள்ளனர். அவர்களது கணிப்புப்படி ஹைதராபாத்தில் தில்சுக்நகர் பகுதியில் தீவிரவாதிகள் இந்த வார தொடக்கத்தில் 2 தடவை ஒத்திகை பார்த்து இருப்பதாக தெரிகிறது.

இந்த ஒத்திகையை முன் நின்று நடத்தியவன் படத்தை ராஜு என்று பெயரிட்டு தேசிய புலனாய்வு அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். இவன் 10 நாட்களாக தில்சுக்நகரில் நடமாடி இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவனது உண்மையான பெயர் மற்றும் விவரங்களை தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர்.

இதற்கிடையே தில்சுக் நகரில் சைக்கிளில் குண்டுகளை எடுத்து வந்து வைத்த தீவிரவாதிகள் இருவரும் தமரேஜ், விகார் அலியாஸ் அகமது என்று தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரும் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஹைதராபாத்தில் குண்டு வெடிப்பு நடத்த தீவிரவாதிகள் இவர்களை அழைத்து வந்ததாக தேசிய புலனாய்வு அமைப்பு சந்தேகிக்கிறது.

சாய்பாபா கோவிலுக்கு குண்டு

இந்த நிலையில் தீவிரவாதிகள் தில்சுக்நகரில் உள்ள சாய்பாபா கோவிலை தகர்க்கவே திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அங்கு குண்டு வெடிப்புக்கு திட்டமிட்டிருந்த சமயத்தில் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கோவிலுக்கு வந்து விட்டதால் தீவிரவாதிகள் கடைசி நிமிடத்தில் தங்கள் சதி திட்டத்தை மாற்றியதாக தெரிகிறது.

மேலும் இந்த தாக்குதல் திட்டம் பாகிஸ்தானில் வகுக்கப்பட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பு கண்டு பிடித்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் தங்கள் கை வரிசையை எப்போது வேண்டுமானாலும் காட்ட முடியும் என்ற நிலையில் இருப்பதை மீண்டும் உறுதி படுத்தியுள்ளனர்.


|    செய்தியை வாசித்தோர்: 14193

DMCA.com