விரிவான செய்திகள்

 

அமெரிக்கா ஜெனீவாவில் சமர்பிக்கவுள்ள அறிக்கை கசிந்தது !

26 February, 2013 by admin

வரும் மார்ச் மாதம் அமெரிக்கா ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலில், இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரவுள்ள பிரேரணையின் சில பிரதிகள் தற்போது கசிந்துள்ளது. HRC-22 என்று அழைக்கப்படும் இவ்வறிக்கையின் பிரதிகள் சில அதிர்வு இணையத்துக்கு தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. இப் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள், முன்னையதை விட கடுமையாக உள்ளது. அவை சிலவேளைகளில் மாற்றப்படலாம். இருப்பினும் இறுதியான வரைபு இன்னும் வெளியாகாத நிலையில், இவ்வறிக்கையின் உள்ளடக்கத்தை தமிழர்கள் நிச்சயம் அறிந்துவைத்திருப்பது நல்லது. எனவே முக்கியமான பாகங்களை அதிர்வு வாசகர்களுக்காக நாம் இங்கே வெளியிடுகிறோம்.

1. நடைபெற்ற போர்குற்றம், சட்டத்துக்கு புறம்பாக கொலைகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படவேண்டும்.

2. தமிழர்கள் மீள் குடியேற்றப்படவேண்டும்.

3. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படவேண்டும்.

என்பன தற்போது முதல்கட்டமாக இணைக்கப்பட்டுள்ள விடையங்கள் ஆகும். இதனைத் தவிர மேற்குறிப்பிட்ட விடையங்கள் மற்றும் இணைத்துக்கொள்ளப்படவுள்ள விடையங்களை, இலங்கை நிறைவேற்றவேண்டும் எனவும், அதன்போது ஐ.நா அமைப்பின் அங்கத்தவர்கள் அதனை மேற்பார்வை செய்யவேண்டும் எனவும் அமெரிக்க பிரேரணையில் கூறப்பட்டுள்ளது. இதனை இலங்கை தடுக்க முடியாது. அப்படி அது ஐ.நா வின் கண்காணிப்பாளர்களை தடுக்குமேயானால், அது வணிகத் தடைக்கு இட்டுச் செல்லும். ஈரான் போல, இலங்கைக்கு எந் நாடும் எப்பொருளையும் அனுப்ப முடியாத நிலை தோன்றும். எனவே இலங்கையானது ஐ.நாவின் கண்காணிப்பாளர்களை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்ற நிலை தோன்றியுள்ளது. 2009ம் ஆண்டு யுத்தம் நடைபெற்றவேளை வன்னியில் இருந்து ஐ.நா மற்றும் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் விலகினார்கள்.

ஆனால் தற்போது அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் நிறைவேறினால், ஐ.நா அதிகாரிகள் மீண்டும் வடகிழக்கிற்க்குச் செல்ல நேரிடும். இதனூடாக வட கிழக்கில் மனித உரிமை சற்று மேம்படும் நிலை தோன்றலாம். காரணம் என்னவென்றால் தற்போது அரசுக்கு எதிராக எவராவது போராட்டம் நடத்தினால் கழிவு எண்ணை ஊற்றுவது, இல்லை என்றால் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரை விட்டு விரட்டுவது என்பது சகஜமாக நடைபெற்று வருகிறது. இனி இப் பகுதிகளில் ஐ.நா கண்காணிப்பாளர்கள் நிலைகொண்டால், இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாது அல்லவா ? அப்படியே நடந்தாலும் அதுவும் ஒரு மனித உரிமை மீறல் செயலாகப் பதிவாகும். எனவே இலங்கை அரசு தற்போது வசமாக மாட்டிக்கொண்டு உள்ளது என்று தான் கூறவேண்டும். ஆனால் ஐ.நாவின் கண்காணிப்பு அதிகாரிகள் இலங்கை சென்று தங்குவதே பெரும் சர்ச்சையைக் கிளப்பும் விடையமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க... மேற்குறிப்பிட்ட பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்த போதிய அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது, எனவும் மேலும் அறியப்படுகிறது. அதாவது ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலின் 25 வது கூட்டத்தொடர் நடைபெற முன்னர், இவை அனைத்துக்கும் இலங்கை தீர்வு கண்டிருக்கவேண்டும் என்று அமெரிக்க பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிபந்தனையானது இலங்கை ஆரசுக்கு மேலும் கால எல்லையை வழங்கியுள்ளது என தமிழர் தரப்பில் சிலர் அதிருப்த்தியடைந்துள்ளார்கள். குறிப்பிட்ட 25 வது அமர்வுகள் இன்னும் ஒன்றரை வருடங்களின் பின்னரே நடைபெறவுள்ளது. அப்படி என்றால் இலங்கைக்கு மேலும் 1 வருடத்துக்கு மேல் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதா ? இது ஒரு இழுத்தடிப்பு நடவடிக்கையா ? என்று சில தமிழர்கள் குழம்பிப்போயுள்ளார்கள். ஆனால் ஒரு இறைமை உள்ள நாடு என்ற வகையில் இலங்கைக்கு கால அவகாசம் கொடுத்தாகவேண்டும் என்ற நிலை காணப்படுகிறது. இருப்பினும் இம் முறை ஐ.நா கண்காணிப்பாளர்கள், இலங்கையில் நிலைகொண்டு, இலங்கை போதிய அளவில் செயல்படுகிறதா என்று கண்காணிக்கவுள்ளது. இதுவே மிக முக்கியமான விடையமாகக் கருதப்படுகிறது.


|    செய்தியை வாசித்தோர்: 87633

DMCA.com