விரிவான செய்திகள்

 

CIA க்குள் இரகசியமாக பதுங்கும் நபர்கள் !

04 March, 2013 by adminஅமெரிக்க உளவுத்துறைகளுக்குள் பணியில் சேருவதென்றால், அது அவ்வளவு சுலபமல்ல. பணியில் சேர விண்ணப்பிக்கும் நபர் பற்றிய எத்தனையோ ஸ்கிரீனிங்குகள், பேக்ரவுண்ட் செக்குகள் என்று அந்த ஆளையே முழுமையாக உருவிப் பார்த்துவிட்டுத்தான் பணியில் சேர்த்துக் கொள்வார்கள். அந்தளவு கில்லாடிகள் அமெரிக்க உளவு அமைப்புகள். ஆனால், கில்லாடிக்குக் கில்லாடியாக, இந்த ஸ்கிரீனிங் எல்லாவற்றையும் கடந்து உளவுத்துறைக்குள் பணியில் சேர்ந்துவிடும் வெளியாட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களில் சிலர், ஏதோ ஒரு காலத்தில் உளவுத்துறையிடம் அகப்பட்டுக் கொள்கிறார்கள். வேறு சிலரோ, கடைசிவரை அகப்பட்டுக் கொள்ளாமல் காலத்தை ஓட்டிவிடுகிறார்கள்.

ஓருசிலர், உளவுத்துறையின் பணியிலிருந்து பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர்தான், அவர்கள் வெளியாட்களுக்காக உளவு பார்த்த விஷயமே தெரியவந்திருக்கிறது. அதற்குள் அவர்கள் உள்ளேயிருந்து அனுப்பவேண்டிய தகவல்கள் அனைத்தையும் அனுப்பி முடித்திருப்பார்கள். இவையெல்லாம் உளவுத்துறைகளுக்கு உள்ளே நடக்கும் உள்விவகாரங்கள். பொதுவாகவே, உளவுத்துறைகளுக்கு உள்ளே நடப்பவை சுவாரசியமானவை. பல சமயங்களில் இவை வெளியே வருவதில்லை. குறிப்பிட்ட சில சம்பவங்கள் வேறு வழியில்லாமல் வெளியே வரவேண்டிய கட்டாயத்தில், வெளியாகும். அமெரிக்காவின் சக்திவாய்ந்த உளவுத்துறைகளுக்குள் வெளியாட்கள் ஊடுருவுவதும், அந்த விஷயம் வெளியே வருவதும், நாம் மேலே குறிப்பிட்ட சுவாரசிய சம்பவங்களில் அடக்கம்.

உலகம் முழுவதிலும் கண்களையும் காதுகளையும் வைத்திருக்கும் அமெரிக்க உளவுத்துறைகளுக்குள் வெளியாட்களால்.... வெளியாட்களால் ஊடுருவ முடியுமா ? இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா ?

ஹிஸ்புல்லாவைச் சேர்ந்த உளவாளி ஒருவர் அமெரிக்க உளவு அமைப்புகளான எஃப்.பி.ஐ. மற்றும் சி.ஐ.ஏ.யில் மிகவும் பொறுப்பான பதவிகளில் இடம்பிடித்துத் தீவிரவாதிகளுக்குத் தகவல் அனுப்பிவந்த விஷயமும் அம்பலமாகியிருக்கிறது. அதேபோல அல்-காய்தா அமைப்பைச் சேர்ந்த ஒருவர், அமெரிக்காவின் பாதுகாப்பு உள் விஷயங்களை அறியக்கூடிய சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையில் (இ.பி.ஏ.) பணியில் சேர முடிந்துமிருக்கிறது.
அதுவும், அமெரிக்கர்களுக்கு பூச்சுற்றியது ஒரு பெண்! வஹீதா தஹ்ஸீன் என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்தான் முதன் முறையாக, அமெரிக்காவின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களைக் கையாளும் இலாகா ஒன்றில் பணிபுரிந்து கொண்டு ரகசியங்களை வெளியே கடத்தியிருந்தார் என்று தெரிவித்தது அமெரிக்க உளவுத்துறை எஃப்.பி.ஐ.

இந்த வஹீதா தஹ்ஸீன் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்கூட அல்ல என்பது அடுத்த ஆச்சரியம். அமெரிக்காவில் வசித்தாலும் குடியுரிமை பெறுவதற்கு முன்னரே வாஷிங்டனில் இருக்கும் இ.பி.ஏ.வில் முக்கியப் பொறுப்பான விஷங்களை ஆய்வு செய்யும் துறையில் இவர் பணியில் சேர்த்துக்கொள்ளப் பட்டிருக்கிறார். இவர்மீது எப்படிச் சந்தேகம் ஏற்பட்டது? அதற்குக் காரணம் தஹ்ஸீனுடைய அமெரிக்கக் குடியுரிமை விண்ணப்பம்தான். 1998ல் தஹ்ஸீன் இ.பி.ஏ.யில் வேலைகேட்டு விண்ணப்பித்தபோது, அவரது விண்ணப்பம் பல அடுக்கு வடிகட்டல்களின் பின்னரே ஏற்றுக் கொள்ளப்பட்டு வேலை கொடுக்கப்பட்டது. பொதுவாக இப்படியான சென்சிட்டிவ்வான வேலைகளுக்கான விண்ணப்பங்களில் விண்ணப்பதாரியின் கல்வித் தகுதி, மற்றும் வேலை அனுபவங்கள் மாத்திரம் பார்க்கப்படுவதில்லை. அதற்கும் ஒருபடி மேலேபோய், அவரது பின்னணி, குடும்பத்தினரின் பின்னணி, முன்னாள் தொடர்புகள் என்று பல விஷயங்களில் விண்ணப்பதாரியை வடிகட்டுவார்கள்.

ஆனால் இந்த வடிகட்டல்களிலும், இ.பி.ஏ. தஹ்ஸீனுடைய விண்ணப்பத்தில் முக்கியமான விடயம் ஒன்றைக் கவனிக்கத் தவறியிருக்கிறது. அது அவரது கணவரின் பின்னணி. அவரது கணவர் எங்கே பணியில் இருந்தவர் என்பது கவனிக்கப்படாமல் விடப்பட்டிருந்தது. கணவர் பாகிஸ்தான் உளவுத்துறையுடன் தொடர்பு கொண்டவர். பாகிஸ்தான் ராணுவத்தின் உளவுத்துறையில் (மிலிட்டரி இன்டலிஜன்ஸ்) முக்கிய பிரிவு ஒன்றில் பணிபுரிந்தவர். பாகிஸ்தான் ராணுவ உளவுப்பிரிவின் இந்த முக்கிய பிரிவு செய்த பிரதான பணி என்ன தெரியுமா? பாகிஸ்தான் அரசுக்காக, அல்-காய்தா மற்றும் தலிபான் இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி, அதன் மூலமாகச் சில காரியங்களைச் செய்து முடிப்பது. இந்தத் தீவிரவாத அமைப்புகளுக்கு ஒருகாலத்தில் ஆயுதங்களையும், சில ராணுவப் பயிற்சிகளையும் கொடுத்தது பாகிஸ்தானின் ராணுவ உளவுத்துறை. (இதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால், மேற்படி தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தானின் உளவுத்துறை ஆயுதங்களைச் சுயமாகவும் கொடுத்திருக்கிறது, அமெரிக்க உளவுத்துறையின் வேண்டுகோளுக்கு இணங்கவும் கொடுத்திருக்கிறது!)

தீவிரவாத இயக்கங்களுக்கு ஆயுதங்கள் கொடுக்கப்பட்டபோது அதை நடத்தி முடித்த உளவுத்துறைப் பிரிவில்தான் தஹ்ஸீனுடைய கணவர் பணியாற்றியிருந்தார். இதனால் அவருக்கு மேற்படி தீவிரவாத இயக்கங்களில் உயர்மட்டத் தலைவர்களுடன் நிச்சயம் தொடர்புகள் இருந்திருக்க வேண்டும். அது ஒரு பின்னணி. மற்றய பின்னணி, தஹ்ஸீன் அமெரிக்காவில் குடியேறுமுன் பாகிஸ்தானில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடாத்தி வந்திருக்கிறார். குறிப்பிட்ட அந்தத் தொண்டு நிறுவனம் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் இயங்கிவந்தது. Help Orphans and Widows (சுருக்கமாக HOW) என்ற பெயரில் இயங்கிய இந்தத் தொண்டு நிறுவனத்துக்கும் அல்-காய்தாவுக்கும் தொடர்புகள் இருந்தன என்பது அமெரிக்க உளவுத்துறையின் கண்டுபிடிப்பு. முஸ்லிம்களின் பாரம்பரிய உடை அணியும் தஹ்ஸீன், அமெரிக்காவில் குடியேறியபின் மிசோரியிலிருக்கும் இஸ்லாமிய – அமெரிக்கத் தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து செயற்பட்டிருக்கிறார். இந்தத் தொண்டு நிறுவனம் பல நாடுகளில் பின்லேடனின் பல திட்டங்களுக்கு நிதியுதவி செய்துள்ளது என்பதும் அமெரிக்க உளவுத்துறையின் கண்டுபிடிப்பு.

குறிப்பிட்ட மிசோரி தொண்டு நிறுவனம், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்த குற்றச்சாட்டில், அமெரிக்க நிதித்துறையால் ‘பிளாக் லிஸ்ட்’டில் வைக்கப்பட்டிருக்கிறது. இவர் தொண்டு நிறுவனம் நடத்தி வந்த கட்டிடம், சில சமயங்களில் தீவிரவாதிகளின் மறைவிடமாகவும் செயல்பட்டிருக்கலாம் என்று எஃப்.பி.ஐ. அதிகாரிகள் பின்னர் தெரிவித்தனர். தஹ்ஸீன் அமெரிக்க அரசில் வேலைக்காக விண்ணப்பித்தபோது, தனது விண்ணப்பத்தில் தான் பாகிஸ்தானில் நடாத்திவந்த தொண்டு நிறுவனம் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். ‘விதவைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்காகவும் நடாத்தப்பட்ட அமைப்பு அது’ எனவும் விளக்கம் கொடுத்திருந்தார். “தஹ்ஸீன் நடத்தி வந்த (HOW) அமைப்பு ஒரு சேவை மனப்பான்மை உடைய உண்மையான தொண்டு நிறுவனம் என்று நாங்கள் நம்பியே அவருக்கு வேலை கொடுத்தோம்” என்று, பின்னர் விசாரணையின்போது இ.பி.ஏ.யால் கூறப்பட்டது.

இ.பி.ஏ.யில் அவருக்கு வருடத்துக்கு 90,000 டாலர் சம்பளத்துடன், 6 தடவைகள் போனஸ்கூட வழங்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் குடியேறிய பின்னரும் இவர் பல தடவைகள் பாகிஸ்தான் சென்று திரும்பியிருக்கிறார் (அமெரிக்காவில் அவர் கடைசியில் கைது செய்யப்பட்டதும், பாகிஸ்தான் செல்லும் பயணம் ஒன்றை அவர் மேற்கொள்ளவிருந்த நிலையில்தான்). கைது செய்யப்படுவதற்குமுன் அவர் பாகிஸ்தானுக்கு அடிக்கடி சென்றுவந்ததற்குக் காரணம், நோய்வாய்ப்பட்ட தனது உறவினர்கள் மற்றும் அநாதைக் குழந்தைகளைச் சந்திப்பதாக என்று கூறியதையும் இ.பி.ஏ. நம்பியிருக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக அவர் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட பயணங்களுக்கான செலவுகளையும் இ.பி.ஏ. ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதாவது, அவர் அமெரிக்க அரசின் செலவிலேயே பாகிஸ்தானுக்கு அவ்வப்போது பயணம் செய்திருக்கிறார். அவர்மீது சந்தேகம் ஏற்பட்டபின் எஃப்.பி.ஐ நடாத்திய ரகசிய விசாரணைகளில், அவர் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட பயணங்களுக்கு கூறிய காரணங்கள் அனைத்தும் பொய்யானவை என்று தெரியவந்ததாக பின்னர் விசாரணையில் கூறப்பட்டிருந்தது.

பாகிஸ்தானுக்கு விமானம் ஏறத் தயாராக இருந்த தஹ்ஸீனை எஃப்.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்த உடனேயே, அவரது வீடு எஃப்.பி.ஐ. அதிகாரிகளால் சோதனையிடப்பட்டிருந்தது. ஃபெயர்ஃபக்ஸில் அமைந்திருந்த அவரது வீட்டின் பெறுமதி, அரை மில்லியன் டொலர்கள்.இங்கும் ஒரு சுவாரசியமான விஷயம், அவரது வீட்டைச் சோதனை செய்வதற்கான உத்தரவில் கையொப்பமிட்டிருந்த அமெரிக்க நீதிபதியின் வீடுகூட தஹ்ஸீனின் வீட்டிலிருந்து நான்கைந்து வீடுகள் தள்ளியே இருந்தது. சோதனையின்போது அவரது வீட்டில் பேராபத்து விளைவிக்கும் நச்சுப் பொருட்கள் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். கிருமிகளைப் பற்றிய ஆராய்ச்சியிலும் தஹ்ஸீன் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனை அவர்கள், அல்-காய்தாவின் திட்டமான அமெரிக்காவில் குடிநீரில் கிருமிகளைக் கலந்து, பேரழிவை ஏற்படுத்தும் திட்டத்துடன் ஒப்பிட்டனர்.தஹ்ஸீனின் வீட்டிலிருந்து எஃப்.பி.ஐ. கைப்பற்றிய, அரபு மொழியிலிருந்த ஆவணங்களில் இருந்த விடயங்களை மொழி பெயர்த்த போது, அதில் அவர் அமெரிக்க ரகசியங்களை உளவு பார்க்கப் போட்டிருந்த திட்டங்கள் பற்றிய குறிப்புகள் இருந்தன.

“நாங்கள் வட அமெரிக்காவில் இருப்பதால் நிறைய விடயங்களை அறிந்து கூற முடியும்” என்றும் “நாங்கள் உளவுச் செய்திகளைப் பெற வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் உளவு நிறுவனங்களையே குறி வைத்திருக்கிறோம்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.தீவிரவாதிகளின் ரகசிய உளவாளிகள் பற்றிய புத்தகம் ஒன்று போல் ஸ்பெர்ரியால் எழுதப்பட்டிருந்தது. “உளவு: எவ்வாறு தீவிரவாதிகளின் உளவாளிகள் வாஷிங்டனில் ஊடுருவுகிறார்கள்” என்ற இந்தப் புத்தகம் வெளியானபோது விற்பனையில் சக்கைபோடு போட்டது.இந்தப் புத்தகத்தில் போல் ஸ்பெர்ரி, “தீவிரவாதிகளின் ரகசிய உளவாளிகள் பெரும்பாலும் தொண்டு நிறுவனங்களை முன்னிறுத்தி, அதன் பின்னணியிலேயே இயங்குகின்றனர்” என்று கூறுகிறார். தொண்டு நிறுவனங்களைக் கண்காணிக்குமாறு, எஃப்.பி.ஐ. அதிகாரிகளுக்குத் தனது புத்தகத்தில் அறிவுரை கூறியிருக்கும் ஸ்பெர்ரி, “தொண்டு நிறுவனங்களின் பின்னணியில், தீவிரவாதிகளின் ரகசிய உளவாளிகள் இருக்கக்கூடும் என்று அமெரிக்க உளவுத்துறைகள் கடந்த அக்டோபர் 2004 வரை சிந்தித்தது இல்லை” என்றும் கூறுகிறார்.


|    செய்தியை வாசித்தோர்: 27148

DMCA.com