விரிவான செய்திகள்

 

பணத்தை நம்மாளுங்க பாக்கெட்ல போட்டாங்க !

26 March, 2013 by admin“வி.ஐ.பிக்கள் பயணத்திற்காக, இத்தாலியின் பின்மெக்கானிக்கா நிறுவனத்திடம் ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பது உண்மைதான்” ஆச்சரியமான இந்த ஒப்புதல் வாக்குமூலம் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அன்டனியின் வாயில் இருந்து வந்திருக்கிறது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட வி.வி.ஐ.பி.க்கள் பயணம் செய்வதற்காக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3600 கோடிக்கு 12 ஹெலிகாப்டர்கள் வாங்க 2010ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக இத்தாலி நிறுவனம், இந்தியர்கள் பலருக்கு ரூ.360 கோடி லஞ்சம் கொடுத்திருப்பதாக இத்தாலிய போலீசார், பின்மெக்கானிக்கா நிறுவன தலைமை அதிகாரியை கைது செய்தனர்.

இதை தொடர்ந்து இந்தியாவிலும் இந்த ஊழல் பெரும் புயலை கிளப்பியது. இது தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிடப்பட்டது. இந்த விவகாரத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அன்டனி இதுவரை மௌனம் சாதித்து வந்தார். “தவறுகள் நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மட்டும் கூறிவந்தார் அவர். இந்த விவகாரம் குறித்து சி.ஏ.ஜி. (இந்திய தணிக்கைத்துறை) அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சகத்திடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தார்கள். இவைகளுக்கும் பதிலளிக்காமல் இருந்தது பாதுகாப்பு அமைச்சகம்.

இப்போது ஏ.கே.அன்டனி மௌனம் கலைந்துள்ளார்.

இன்று டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே.அன்டனி, “ஹெலிகாப்டர் கொள்முதலில் ஊழல் நடந்திருப்பது உண்மை” என்று ஒத்துக்கொண்டார். “தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பான நடவடிக்கை இருக்கும். இந்த விஷயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியே தீருவேன். இனி பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத்திற்கான‌ கொள்முதல் விவகாரங்களில் புதிய கொள்கையை வகுக்கும்” என்று தெரிவித்த அவர், “எதிர்காலத்தில் ராணுவத் தளவாடங்கள் இறக்குமதி செய்வது தவிர்க்கப்படும்” என்றார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்துவிட்ட தைரியத்தில் உண்மையை பேசி இருக்கிறார் ஏ.கே.அன்டனி. நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்தால் என்ன… இதை வைத்தே விளையாடும் பா.ஜ.க.


|    செய்தியை வாசித்தோர்: 13952

DMCA.com