விரிவான செய்திகள்

 

3 இளைய மடாதிபதிகள் தீயில் விழுந்து தற்கொலை !

08 April, 2013 by admin

கர்நாடக மாநிலத்தில் தலைமை மடாதிபதி தற்கொலை செய்த மனவேதனை தாங்காமல், 3 இளைய மடாதிபதிகள் இன்று யாக குண்டம் தீயில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு: கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் பழமையான சவ்லி மடம் உள்ளது. இது ரெட்டி சமூகத்தை சேர்ந்தவர்களின் மடம். தலைமை மாடதிபதியாக கணேஷ் அவதூத மகாசுவாமி இருந்தார். இளைய மடாதிபதியாக இருந்த ஜீவானந்த சுவாமி கடந்த ஜனவரி மாதம் மடத்தில் இருந்து காணாமல் போய்விட்டார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், மாடதிபதிதான் அவரை கொலை செய்துவிட்டார் என்று பக்தர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மறுப்பு தெரிவித்தும் பக்தர்கள் ஏற்கவில்லை.

இதனால் மனம் உடைந்த தலைமை மடாதிபதி, கடந்த பிப்ரவரி 28ம் தேதி இரவு கோயில் கருவறையில் கடிதம் எழுதி சிவன் சிலை மீது வைத்துவிட்டு கருவறைக்குள்ளேயே தற்கொலை செய்து கொண்டார். அதன்பின், புதிய தலைமை மடாதிபதி நியமிக்கப்படவில்லை. இளைய மடாதிபதிகளாக இருந்த ஈரேரெட்டி (45), ஜகன்னாத் சுவாமி (24), பிரணவ் சுவாமி (18) ஆகிய மூவரும் மடத்தை பராமரித்து வந்தனர்.கடந்த 2 மாதத்துக்கு முன்பு தலைமை மடாதிபதி தற்கொலை செய்து கொண்டதால் மடத்துக்கு தீட்டு ஆகிவிட்டது. அதற்கு சிறப்பு ஹோமம் நடத்த வேண்டும் என்று இவர்கள் கூறினர். இதையடுத்து யாக குண்டம் அமைத்தார்கள். இன்று காலை யாகம் நடத்துவதாக இருந்தது. இந்நிலையில் அதிகாலை 5.30 மணி அளவில் யாக குண்டத்தில் நெய் ஊற்றி தீ எரியவிட்டனர். திடீரென 3 பேருமே அந்த யாக குண்டத்தில் குதித்துவிட்டனர். தீயில் அவர்கள் கருகி இறந்தார்கள்.

தலைமை மடாதிபதி இல்லாததால் மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டோம். இதற்கு யாரும் காரணம் இல்லை என்று கடிதம் எழுதி வைத்திருந்தார்கள். தகவலறிந்து போலீசார், மாவட்ட கலெக்டர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


|    செய்தியை வாசித்தோர்: 30523

DMCA.com